தமிழையும் அரச மொழியாக அறிவிப்பதற்கு மகிந்த கடும் எதிர்ப்பு

சிறிலங்காவின் அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்ட உபகுழு சமர்ப்பித்த, தமிழையும் அரச கரும

மொழியாக அறிவிக்கும் யோசனைக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறு உப குழுக்கள் சமர்ப்பித்த யோசனைகள் தொடர்பாக மகிந்த ராஜபக்ச நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அடிப்படை உரிமைகள் தொடர்பான உபகுழுவினால், சமர்ப்பிக்கப்பட்ட, தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளை அரசகரும மொழிகளாக அறிவிக்கும் திட்டத்தை மகிந்த ராஜபக்ச கடுமையாக எதிர்த்துள்ளார்.

1957ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் தமிழ் மொழி பேசுபவர்கள் தான் அதிகம் என்றும், சிங்களமொழி பேசுவோர் அங்கு சிறுபான்மையினர் என்றும் அதனால் அங்கு தமிழை அரசகரும மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கோரியிருந்தார்.

அதே நிலையைத் தான் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவும் அப்போது எடுத்தார். வடக்கு கிழக்கில் மாத்திரமே தமிழ் மொழி பேசப்படுவதால், பெரும்பான்மையான மக்கள் பேசும் சிங்கள மொழியை அவர் அரச கரும மொழியாக பிரகடனப்படுத்தினார்.

இந்தியாவில் கூட, பல்வேறு மொழிகள் இருந்தாலும் ஹிந்தி மட்டுமே அரச கருமமொழியாக இருக்கிறது என்பதையும் மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.