தமிழில் தேசிய கீதம் பாடும் உரிமையை இலங்கைப் பிரஜைகள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் திருகோணமலை பௌத்த பிக்கு ஆனந்த தேரர் தெரிவிப்பு

இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுகின்றபோது எவ்விதமான மாற்றம் அல்லது திரிபுபடுத்தல்n ஆகியவை இன்றி பாடப்படுகின்றது. ஏனவே தமிழ் மக்கள் தங்களுக்கு விளங்கும் மொழியில் தமிழில் தேசிய கீதம் பாடும் உரிமையை இலங்கைப் பிரஜைகள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு திருகோணமலை பௌத்த பிக்கு ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். ஆண்மையில் கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையர்ற்றுகையில் கடந்த காலங்களில் இலங்கையின் பல பாகங்களிலிருந்து தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடுவது தொடர்பான பல எதிர்க்கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வந்தது. இது ஒரு தவறான விடயமாகும். இலங்கையில் மூவின மக்கள் வாழுகின்றார்கள். ஏனவே ஒரு இனத்தை அவமதிக்கும் செயல் கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும். இளம் பௌத்த பிக்குகளுக்கு பௌத்த தர்மத்தைக் கற்பிக்கும் தேரர்கள் மற்றும் சிரேஸ்ட மதத் தலைவர்கள் இதனை தங்கள் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

தமிழ் மொழியில் இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றபோது, அதன் தாளங்களிலும் எவ்வித மாற்றமும் இல்லாமலே இசைக்கப்படுகின்றது. மேலும் சொற்பதங்களும் மாற்றம் செய்யப்படாமல் இசைக்கப்படுகின்றன. ஏமது சிங்கள மக்கள் தேசிய கீதத்தை இசைப்பது போன்றே தமிழ் மொழியிலும் தமிழ் மக்களும் அதனை இசைக்கின்றார்கள். இந்த உரிமையானது இலங்கையின் அரசியல் அமைப்பின் ஊடாகவே தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏனவே பெரும்பான்மை இனமக்கள் தங்கள் குறுகிய எண்ணங்களை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு தமிழ் மக்களின் அபிலாசைகளை மதிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். ஓரு பௌத்த பிக்கு என்ற வகையில் இதுவரையில் நான் தமிழ் மொழியை பேசுவதற்கு கற்றுக்கொள்ளவில்லை என்பதை அறிந்து வெட்கப்படுகின்றேன் என்றார்.