தமிழர்களுக்கு இடமுண்டு – முஸ்லிம்களுக்கு இடமில்லை – ராஜபக்ஷ அமைச்சரவை

இலங்கை அரசின் புதிய அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுள்ளது. சத்திய பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்த அமைச்சரவையில் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் சென்ற ஆறுமுகன் தொண்டமானும், வட மாகாண தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்றம் சென்ற டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுள்ளனர்.

புதிய அமைச்சரவையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவர் கூட இடம்பிடிக்கவில்லை.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இந்த சத்திய பிரமாண நிகழ்வு இன்று பிற்பகல் ஒரு மணிக்கு இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பாரிய வெற்றியை பெற்ற நிலையில், இடைகால அரசாங்கமொன்றை நடத்திசெல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை நேற்றைய தினம் இராஜிநாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

இதன்படி, ரணில் விக்ரமசிங்கவின் பதவி விலகல் கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் இன்று அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது,