தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 35 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வருமானவரித் துறையினர் சோதனையை முன்னிட்டு அமைச்சர் இல்லத்தில் சி.ஆர்.பி.எஃப்., வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில்தான் இருக்கிறார்.

மேலும், புதுக்கோட்டையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்லூரி, கல் குவாரி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. வரி ஏய்ப்புப் புகார், ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடா புகார் எதிரொலியாக இந்த சோதனைகள் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினகரனுக்கு நெருக்கமானவர்..

அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக பொதுச் செயலாளர் தினகரனின் ஆதரவாளர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் இல்லம் தவிர சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியிலும் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தினகரனுக்கு ஆதரவு கொடுத்த சரத்குமார்:

முன்னதாக, நேற்று (வியாழக்கிழமை) சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அதிமுக அம்மா அணியின் டிடிவி.தினகரனுக்கு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் சரத்குமாரின் வீட்டில் காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறுவதால் கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.