தமிழக அரசு சார்பில் ஆண்டு முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்: முதல்வர் அறிவிப்பு

தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டு முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இலங்கையில் உள்ள கண்டியில் 17-1-1917-ல் பிறந்த எம்.ஜி.ஆரின் குடும்பம் கும்பகோணத்தில் குடியேறியது. வறுமையினால் பள்ளிப் படிப்பை கைவிட்டு நாடகத்தில் நடிக்கத் தொடங்கிய எம்.ஜி.ஆர். திரைத்துறையிலும் நுழைந்தார். தனது கடின உழைப்பாலும், கருணை உள்ளத்தாலும் திரைத்துறையில் வானுயர உயர்ந்தார். 136 திரைப்படங்களில் நடித்த அவர் மக்களால் புரட்சி நடிகர் என அழைக்கப்பட்டார்.
அண்ணாவின் ஆளுமையால் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர். 1952-ல் திமுகவில் இணைந்தார். தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தபோது மக்கள் தலைவராக எம்.ஜி.ஆர். இருப்பதை அண்ணா உணர்ந்தார். இதனால் 1962-ல் எம்.ஜி.ஆர். சட்ட மேலவை உறுப்பினராக்கினார். தான் நடித்த திரைப்படங்களில் திராவிட இயக்க கொள்கைகளை இடம்பெறச் செய்தார்.
எம்.ஜி.ஆரின் புரட்சிகர கருத்துகள் மக்கள் மனதில் ஆழப் பதிந்து ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்தது. 1967 தேர்தலில் பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர். மகத்தான வெற்றி பெற்றார். அண்ணாவின் மனதில் இதயக்கனியாக இடம்பெற்றார்.
1969-ல் அண்ணா மறைவுக்குப் பிறகு திமுக பொருளாளராக எம்.ஜி.ஆர். தேர்வு செய்யப்பட்டார். திரையில் தான் அறிவுறுத்திய நேர்மை, ஒழுக்கம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற கருத்துகளை ஆட்சியில் கடைபிடிக்க வலியுறுத்தினார். இதனால் அன்றைய முதல்வர் கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து 1972-ல் அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கினார். குறுகிய காலத்திலேயே திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் வென்று சாதனை படைத்தார். இந்த இடைத்தேர்தலில் திமுக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 1977 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வென்றது. எம்.ஜி.ஆர். முதல்வரானார். 1980-ல் எதிர்க்கட்சியின் சூழ்ச்சியால் ஆட்சி கலைக்கப்பட்டது. மீண்டும் நடந்த தேர்தலில் பாரதமே வியக்கும் வகையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார். தொடர்ச்சியாக 3 முறை முதல்வராகி அரசியல் வாழ்வில் தோல்வியையே சந்திக்காத தலைவராக எம்.ஜி.ஆர். திகழ்ந்தார்.
ஏழைகள் ஏற்றம் பெற வேண்டும் என்ற நோக்கில் ஆட்சி நடத்திய எம்.ஜி.ஆர்., தனது ஆட்சியில் விலைவாசி உயர்வு ஏற்படாத வகையில் பார்த்துக் கொண்டார். குறிப்பாக அரிசி விலையை கட்டுக்குள் வைத்திருந்தார். அவர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டம் இன்றளவும் உலகம் போற்றும் உன்னதத் திட்டமாக உள்ளது.
1981 மதுரையில் உலகத் தமிழ் மாநாடு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், குக்கிராமங்களுக்கும் அரசுப் பேருந்துகள், கிராம நிர்வாக அலுவலர் பதவி, இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் என எம்.ஜி.ஆரின் சாதனைகள் ஏராளம்.
ஒவ்வொரு ஏழையின் வாழ்விலும் ஏற்றத்தை ஏற்படுத்தினார். எம்.ஜி.ஆரை கை பிடித்தவர்கள் வெற்றியை தக்க வைத்துக் கொண்டார்கள். எதிர்த்தவர்கள் வெற்றியையும், மக்கள் மதிப்பையும் இழந்தார்கள்.
மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் சீரமைப்பு, சட்டப்பேரவையில் எம்.ஜி.ஆர். படம், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை அண்ணா சாலையில் எம்.ஜி.ஆர். சிலை என அவரது நினைவைப் போற்றும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் பல்வேறு சிறப்புகள் செய்யப்பட்டன.
தான் வாழ்ந்த வீடு உள்பட ஈட்டிய செல்வங்கள் அனைத்தையும் காது கேளாதோர் பள்ளி மற்றும் பொது நோக்கங்களுக்காக எழுதி வைத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு அவரது புகழ் நிலைத்திடும் வகையில் நூற்றாண்டு விழா கொண்டாட கடந்த 2-ம் தேதி எனது தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டு முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படும். நானும், அமைச்சர்களும் இவ்விழாவில் பங்கேற்க உள்ளோம்.
அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆரின். சாதனைகள், சமுதாய சேவைகள், மக்கள் நலத் திட்டங்களை விளக்கும் வகையில் பேரணி நடத்தப்படும். கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படும்” என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.