‘‘தமிழகத்தை தமிழர் தான் ஆளவேண்டும்’’; ஜெ.தீபா பேட்டி

எம்.ஜி.ஆர்.–அம்மா–தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:– தமிழகத்தை சேர்ந்தவர் இங்கே முதல்–அமைச்சர் ஆவது சாத்தியமா? என்பது தெரியாது. ஆனாலும் தமிழகத்தை தமிழர் தான் ஆளவேண்டும் என்று சொல்வதில் தவறு ஒன்றும் இல்லையே? அது தவறு போல எனக்கு தெரியவில்லை.
எதற்காக காலதாமதம்
கேள்வி:– தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால், உங்கள் பேரவை சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்களா?
பதில்:– நிச்சயமாக நிறுத்தப்படுவார்கள். தமிழகத்தில் நடத்தப்படும் அனைத்து தேர்தல்களிலும் நாங்கள் போட்டியிடுவோம்.
உள்ளாட்சி தேர்தலை நடத்த ஏன் யோசிக்கிறார்கள்? எதற்காக காலதாமதம் செய்கிறார்கள்? என்பது தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மேற்கண்டவாறு ஜெ.தீபா பதிலளித்தார்.
ஆவேசம்
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ‘‘உங்கள் பேரவை முறையாக இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்கிறார்களே? பதிவு செய்ததற்கான ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா? அதனை வெளியிட முடியுமா?’’ என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஜெ.தீபா திடீரென்று உணர்ச்சி வசப்பட்டார். பின்னர் ஆவேசமாக பத்திரிகையாளர்களை நோக்கி, ‘‘உங்களிடம் அதனை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. நீங்கள் ஒன்றும் கோர்ட்டு கிடையாது. அது உங்களுக்கு தேவை இல்லாதது. உங்கள் தனிப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. எதையும் உங்களிடம் விவரித்து கூறவேண்டிய அவசியம் எனக்கு கிடையாது’’ என்று வேகவேகமாக பேசினார்.
பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்துவிட்டு, ‘பதிலை உங்களிடம் கூற அவசியம் இல்லை என்று எப்படி கூறலாம்? என்று பத்திரிகையாளர்களும் கேள்வி எழுப்பினர்.
ஆனால் அதனை ஜெ.தீபா இறுதிவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சில பத்திரிகையாளர்கள் பாதியிலேயே வெளியேறினர்.