தமிழகத்துக்கு பேரிடி! காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க உத்தரவிட முடியாது- சுப்ரீம்கோர்ட்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உடனே உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் கருத்து தமிழகத்துக்கு பேரிடியாகும்.

டெல்லி: விவசாயிகள் செத்து மடிந்து கொண்டிருக்கும் நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பது தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு தொடர்பாக தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன. இம்மனுக்கள் மீது நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையில் முதலில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. அதேபோல் காவிரியில் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வருகிறது. இதனையும் ஏற்க கர்நாடகா மறுத்து வருகிறது. இம்மனுக்கள் மீதான இன்றைய விசாரணையின் போதும் இடைக்கால உத்தரவு வரும் தமிழகத்துக்கு காவிரியில் 2,000 கன அடிநீரை கர்நாடக அரசு திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசின் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு கர்நாடகா அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உடனே உத்தரவிட முடியாது என கூறி வழக்கு விசாரணையை பிப்ரவரி 7-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். காவிரி நீரின்றி தமிழகத்தில் 90-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டுபோயுள்ளனர். இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உடனே உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றமும் கைவிரித்திருப்பது தமிழகத்துக்கு பேரிடியாகும். உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்தால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.