தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் நடக்க வாய்ப்பு: பிரேமலதா விஜயகாந்த் கருத்து

தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது என தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 6 மாதமாக பரபரப்பான அரசியல் சூழல் நிலவுகிறது. தமிழகத்தில் நிலையான முதல்வரோ, ஆளுநரோ, உள்ளாட்சிப் பிரதிநிதிகளோ இல்லை.

சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி வருகின்றன. ஆட்சியைக் கவிழ்க்க தினமும் ஒரு நாடகம் நடத்தப்படுகிறது. தற்போது நடக்கும் நிகழ்வுகள் மூலம் நல்ல தலைவர் யார் என்பதை மக்கள் உணர்ந்துகொள்வார்கள்.

மக்கள் கருத்தைக் கேட்டு, ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை செயல்படுத்தப்போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில், தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி தேர்தல் நடந்தால், அதைச் சந்திக்க தேமுதிக தயாராக உள்ளது.

ஈஷா யோக மையம் சார்பில் அவ்வளவு பெரிய சிலையை கட்டத் தொடங்கும்போது எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல், திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்க வரும்போது எதிர்ப்பு தெரிவிப்பது சரியானதல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.