தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற வைத்துவிடலாம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தப்பு கணக்கு போட்டால் பகல் கனவாக முடியும்

தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழக விவசாயிகளின் 19 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என்று மத்திய–மாநில அரசுகளை வலியுறுத்தி தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இணைந்து நடத்திய முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றதை சகித்துக்கொள்ள முடியாத பா.ஜ.க.வின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தி.மு.க. மீதும், மு.க.ஸ்டாலின் மீதும் உதவாத வாதங்களை அடுக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

காவிரிக்காக என்ன செய்தது தி.மு.க. என்று அரசியல் அரிச்சுவடி தெரியாதது போல் கேள்வி எழுப்புகிறார். காவிரி நடுவர் மன்றம் அமைத்தது, இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற காவிரி நதி நீர் ஆணையம் அமைத்தது, காவிரி இறுதி தீர்ப்பை பெற்றது, அந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிட போராடியது எல்லாம் தி.மு.க. தான் என்பது தமிழிசை சவுந்தரராஜனுக்கு மறந்து போனது ஏன் என்பது வியப்பாக இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள தங்களது ‘பினாமி ஆட்சிக்கு’ துணை நின்று வாதாடுவதற்குத்தானே? கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவுகளை நிறைவேற்றாமல், அந்த உத்தரவை எதிர்க்க அமைச்சரவையில் தீர்மானம் போட இதே பா.ஜ.க. நியமித்த கவர்னர் தானே கர்நாடக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்டினார்? கர்நாடக மாநிலத்திற்கு துணை போனால் பா.ஜ.க.விற்கு அரசியல் வாழ்வு கிடைக்கும். தமிழகத்திற்கு உதவி செய்தால் பா.ஜ.க.விற்கு என்ன லாபம் என்ற வஞ்சக எண்ணத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?

கட்டுக்கதைகள் மிகுந்த அறிக்கை

விவசாயிகள் நலன் காக்கிறோம் என்று வீண் தம்பட்டம் அடிக்கும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சில கேள்விகள் கேட்கிறேன். தமிழக அரசு கோரிய வறட்சி நிவாரண நிதியை மாநில பா.ஜ.க.வால் மத்திய அரசிடமிருந்து ஏன் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. ஆனால் வெறும் வாயால் முழம் போடுவது போல் பா.ஜ.க. ஏதோ விவசாயிகளுக்காகவே பிறந்த அரசு என்பது போன்ற கட்டுக்கதை மிகுந்த அறிக்கைகளை கண்ணை மூடிக்கொண்டு விடுவதை தமிழிசை சவுந்தரராஜன் தவிர்க்க வேண்டும்.

விவசாயிகளுக்காக நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தை வரவேற்கவில்லை என்றாலும், அந்த போராட்டம் அமைதி வழியில், அற வழியில் மாபெரும் வெற்றி பெற்றதை கொச்சைப் படுத்தி விவசாயிகளின் வெந்துபோன புண்ணில் வேல் பாய்ச்ச வேண்டாம். விவசாயக் கடன்களை முன்பு இருந்த மத்திய அரசுகள் போல் தள்ளுபடி செய்யவேண்டும் என்று தைரியமிருந்தால் பிரதமரிடம் கோரிக்கை வையுங்கள்.

பகல் கனவு

இது எதையும் செய்யாமல், விவசாயிகளின் நலன்களுக்காக துரும்பை கூட எடுத்துப்போடாமல், போராடிய விவசாயிகளை கூட சந்திக்காமல் அவர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்து விட்டு, ஏதோ அறிக்கை அரசியல் மட்டும் நடத்தி, தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற வைத்து விடலாம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தப்புக் கணக்குப்போட்டால் அது பகல் கனவாகவே முடியும் என்பதை அவருக்கு நினைவுபடுத்தி, தயவு செய்து வறட்சியில் வாடும் விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினைகளிலும் அரசியல் செய்ய முயற்சி செய்ய வேண்டாம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.