தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களில் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு, ரூ.30 கோடியே 5 லட்சம் மதிப்பிலான 54 திட்டப்பணிகளை தொடங்கிவைத்தார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 140 ஆண்டு காலத்தில் இல்லாத வறட்சி தற்போது நிலவி வருகிறது. பருவமழை பொய்த்ததால் அணைகள், ஏரிகளில் தண்ணீர் இல்லை. ஆனாலும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தேவையான குடிநீர் வழங்கி வருகிறது. குடிநீர் வழங்கல் வாரியம் மூலம் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. கடுமையான வறட்சியை கருத்தில் கொண்டு குடிநீர் திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

‘குடிமராமத்து’ திட்டத்தின் கீழ் ரூ.100 கோடி செலவில் பணிகள் நடந்து வருகின்றன. முதல்கட்டமாக 1,519 ஏரிகள், குளங்களில் குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்கு கூடுதலாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

வண்டல் மண் எடுக்கலாம்

தமிழகத்தில் உள்ள ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டைகளில் இதுவரை அகற்றப்படாமல் உள்ள வண்டல் மண் மற்றும் சவுடுமண்ணை அப்பகுதியில் உள்ள உள்ளூர் விவசாயிகளே இலவசமாக எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் இருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

குடிமராமத்து பணிகளை செய்வதன் மூலம் தூர்வாரப்படும் ஏரி, குளம், குட்டை ஆகியவற்றின் மொத்த நீர் கொள்ளளவு 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும். இதற்கான ஆணை கடந்த 27-ந் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒரு விவசாயி அவரது நிலத்திற்கு 10 டிராக்டர் லோடு வண்டல் மண் மட்டுமே எடுக்கமுடியும். இந்த ஆணை வெளியிட்ட பின், நஞ்சை நிலம் வைத்துள்ள விவசாயிகள் ஏக்கருக்கு 25 யூனிட்டும், புஞ்சை நிலம் வைத்துள்ள விவசாயிகள் 30 யூனிட்டும் வண்டல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.

ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணம்

அதேபோல வீடு கட்டுவோர் சவுடுமண் எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. எனவே ஏழை, எளிய மக்கள் சவுடுமண் எடுத்து வீடுகள் கட்டிக்கொள்ளலாம். இவ்வாறு வண்டல் மண் எடுப்பதற்கு அதிகபட்சம் 20 நாட்கள் மட்டுமே மாவட்ட கலெக்டரால் அனுமதி வழங்கப்படும். மேலும் நீர்நிலைகளை பராமரிக்கும் பொதுப்பணித்துறை அல்லது ஊரக வளர்ச்சித்துறையினரின் அனுமதியை பெறவேண்டும். இதில் ஏதேனும் புகார் இருந்தால் கலெக்டரை அணுகலாம்.

கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏற்கனவே வறட்சி நிவாரண நிதியாக ரூ.2,247 கோடி நிதி வழங்கப்பட்டு உள்ளது. வறட்சி நிவாரண நிதி கிடைக்காத விவசாயிகள் தாசில்தாரிடம் மனு கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.

தூர்வார நடவடிக்கை

தமிழகத்தில் மேட்டூர் அணை, வைகை, அமராவதி, பெருஞ்சாணி மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 அணைகளை தூர்வாருவதற்கான பணிகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் ‘வேபாஸ்’ நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. அந்த நிறுவன ஆய்வு அறிக்கைக்கு பின் அணைகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதைத் தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

விவசாயிகள் இறப்பு

விவசாயிகள் இறந்துவிட்டார்கள் என்ற தகவல் வந்தவுடன், அந்தந்த கலெக்டர்கள் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி விவசாயிகள் இறப்புக்கு என்ன காரணம் என கண்டறிந்து கலெக்டர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் சுப்ரீம் கோர்ட்டில் அரசு பதில் தெரிவித்துள்ளது.

ஆனாலும் இறந்த விவசாயிகள் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நிலமே இல்லாமல் இறந்தவர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டுமென்று கோரிக்கைகள் வந்தது. அதற்கு சட்டத்தில் இடமில்லை. விவசாயம் செய்து அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக அரசு நிவாரணத் தொகை வழங்கும்.

நெடுஞ்சாலைகள் மாற்றம்

மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடியதால்தான் சாலைகளின் பெயர்கள் மாற்றப்படுவதாக சொல்வது தவறு. மாநில நெடுஞ்சாலைகளை மாநகராட்சி, நகராட்சி சாலைகளாக மாற்றினால்தான் பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கமுடியும். ஏற்கனவே, சாலைகளை மாற்றுவதற்கான கோரிக்கை வைக்கப்பட்டிருந்தன.

மூடப்பட்ட ‘டாஸ்மாக்’ கடை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஏனென்றால், அவர்களுக்கு நிரந்தரப்பணி அல்ல. என்றாலும் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு வேறு பணி வழங்க முயற்சி எடுத்து வருகிறோம். சேலம் உருக்காலையை தனியார்மயமாக்க கூடாது என்று பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்துக்கு நல்ல பதில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

மின்வெட்டு இல்லை

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு சில இடங்களில் ஏற்பட்ட மின்பழுது காரணமாக தடைபட்ட மின்சாரம், சிலமணி நேரங்களில் சீரானது. அரசு டாக்டர்கள் கோரிக்கை மத்திய அரசுடன் தொடர்புடையது. மாநில அரசுடன் டாக்டர்கள் இணக்கமாகவே உள்ளனர். எனவே, அரசுடன் பேச்சுவார்த்தை தோல்வி என்பதை ஏற்கமுடியாது. மத்திய அரசின் முடிவிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு காவல்துறை விசாரணையில் உள்ளது. குற்றம் செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க மறுத்துவிட்டார்.