தனுஷ் என்னை தாக்கவில்லை: பாடகி சுசித்ரா புது விளக்கம்

தனுஷ் என்னை தாக்கவில்லை, எனது கை ஒரு குழுவால் தாக்கப்பட்டது என பாடகி சுசித்ரா புது விளக்கமளித்துள்ளார்.

பிப்ரவரி 20-ம் தேதி ட்விட்டர் பக்கத்தில் தனது காயம்பட்ட கையின் புகைப்படத்தைப் பகிர்ந்த சுசித்ரா, “இது தனுஷ் குழுவின் மோசமான கையாளால் ஆன காயம். மன்னித்துவிடுங்கள். நீங்கள் தகுதி இழந்துவிட்டீர்கள்” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “இது சுச்சிதான், நான் மீண்டும் வந்துவிட்டேன். பாதுகாப்பாக உள்ளேன். தனுஷ் என்னிடம் ஆடிய தரக்குறைவான விளையாட்டைப் பற்றி அனைவரிடமும் கூற தயாராக இருக்கிறேன்” என்று பதிவிட்டார்.

சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார், சுசித்ராவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் ”சுசித்ராவின் ட்விட்டர் பக்கம் இன்று மீட்கப்பட்டது. கடந்த சில நாட்களாக சுச்சியின் ட்விட்டரில் வெளியான செய்திகள் அனைத்துமே பொய்யானவை. இதில் சம்பந்தப்பட்ட நபர்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதால் அவர்களிடம் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஊடகங்கள் இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தாமல், உரிய முறையில் செய்தியாக்க வேண்டுகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், “புரளிகளுக்கு விளக்கம் அளிக்கிறேன். தனுஷ் என்னை தாக்கவில்லை. அது ஒரு விளையாட்டு. சற்று கட்டுப்பாடு மீறிச் சென்றது. எனது கை ஒரு குழுவால் தாக்கப்பட்டது. ஷப்பா !” என்று சுசித்ரா தெரிவித்துள்ளார்.

சுசித்ராவின் கணவர் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது என்று விளக்கமளித்த நிலையில், இன்றைய ட்வீட் தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.