தனுஷுக்கு மரபணு சோதனை நடத்தக் கோரிய வழக்கு: விசாரணை மார்ச் 9-க்கு ஒத்திவைப்பு

தனுஷூக்கு மரபணு சோதனை நடத்தக் கோரி மேலூர் தம்பதி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வருகிற 9-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. தனுஷிடம் பராமரிப்பு செலவு கோரி கதிரேசன் தாக்கல் செய்த மனு மீதான விசா ரணைக்கு தடை விதிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன்(60), இவரது மனைவி மீனாட்சி(55). இவர்கள் தங்களின் மூத்த மகன் கலைச்செல்வன்தான் நடிகர் தனுஷ் என உரிமை கோரி வருகின்றனர். தனுஷிடம் மாதம் ரூ.65 ஆயிரம் பராமரிப்பு செலவு கேட்டு மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் தனுஷ் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற கிளையில் பிப்ரவரி 28-ம் தேதி நடிகர் தனுஷின் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, தனுஷ் போலி பள்ளி மாற்றுச் சான்றிதழ் தாக்கல் செய்திருப்பதாகவும், கஸ்தூரி ராஜா, அவரது மனைவி விஜயலெட்சுமி ஆகியோரின் ஜாதி சான்றிதழ்களை தாக்கல் செய்ய போடிநாயக்கனூர் வட்டாட்சியருக்கு உத்தரவிடக் கோரி ஒரு மனுவும், தங்களுக்கும் தனுஷூக்கும் மரபணு சோதனை நடத்த உத்தரவிடக் கோரி ஒரு மனுவும் கதிரேசன், மீனாட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. தனுஷின் அங்க அடையாள சோதனை தொடர்பான அறிக்கை மூடி முத்திரையிட்ட கவரில் வைத்து நீதிபதியிடம் வழங்கப்பட்டது.

பின்னர், தனுஷின் மனுவையும், ஜாதி சான்றிதழ், மரபணு சோதனை தொடர்பாக கதிரேசன் தாக்கல் செய்துள்ள மனுக்களையும் தனித்தனியாக விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார். தனுஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “மரபணு சோதனை மனுவை ஆட்சேபிக்கிறோம். வழக்கு முடியும் நிலையில் அந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதனை ஏற்கக்கூடாது” என்றார்.

இதையடுத்து, “மரபணு சோதனை கோரிய மனுவை முதலிலேயே தாக்கல் செய்திருக்க வேண்டும். எதிர்தரப்பில் கடைசி நேரத்தில் தாக்கல் செய்துள்ளனர்” என நீதிபதி குறிப்பிட்டார். பின்னர் தனுஷ் தொடர்பான அனைத்து மனுக்களின் விசாரணையையும் வருகிற 9-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அப்போது தனுஷ் தரப்பில், பராமரிப்பு செலவு கோரிய வழக்கு மேலூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதற்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையேற்று மறு உத்தரவு வரும்வரை மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ள பராமரிப்பு செலவு கோரிய வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.