தண்டனைக்கு முன் முஷாரப் இறந்தால் உடலை 3 நாள் துாக்கிலிட உத்தரவு

துாக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன், முஷாரப் இறந்து விட்டால், அவரது உடலை இஸ்லாமாபாதில் உள்ள மத்திய சதுக்கத்துக்கு இழுத்து வந்து, மூன்று நாட்களுக்கு துாக்கில் தொங்க விட வேண்டும் என, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் விபரம், தற்போது வெளியாகி உள்ளது. பாக்., முன்னாள் ராணுவ தளபதியும், முன்னாள் அதிபருமான முஷாரப்புக்கு, 76, தேச துரோக வழக்கில், இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம், சமீபத்தில் மரண தண்டனை விதித்தது. மூன்று நீதிபதிகளுமே, முஷாரப் புக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என ஒருமனதாக தீர்ப்பளித்தனர்.ஆனால், தண்டனை நிறைவேற்றம் குறித்து, மூன்று பேரும் வெவ்வேறு விதமான தீர்ப்புகளை அளித்துள்ளனர். இதன் முழு விபரங்கள், நேற்று வெளியாகின. சிறப்பு நீதிமன்ற அமர்வில் இடம் பெற்ற, பெஷாவர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வாக்கர் அகமது சேத், தன் தீர்ப்பில் கூறியுள்ளதாவது:வெளிநாட்டில் வசிக்கும் முஷாரப்பை கைது செய்து, அழைத்து வந்து, துாக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்.ஒருவேளை, துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன், முஷாரப் இறந்து விட்டால், அவரது உடலை, இஸ்லாமாபாதில், பார்லிமென்டிற்கு அருகில் உள்ள மத்திய சதுக்கத்துக்கு இழுத்து வந்து, மூன்று நாட்களுக்கு துாக்கில் தொங்க விட வேண்டும். இவ்வாறு, அவர், தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார். புலம்பல்இதற்கிடையே, உடல் நலக்குறைவு காரணமாக, ஐக்கிய அரபு எமிரேட்சின், துபாயில் சிகிச்சை பெற்று வரும் முஷாரப், முதல் முறையாக, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:தற்போது பதவியில் உள்ள சிலரது பழி வாங்கும் அரசியல் காரணமாகவே, எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.