டெல்லி போலீஸ் விசாரணை டி.டி.வி.தினகரன் கைது ஆவாரா? டெல்லி வக்கீலும் சிக்குகிறார்

அ.தி.மு.க. இரண்டாக பிளவுப்பட்டுள்ளதால் அந்த கட்சியின் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தை தலைமை தேர்தல் கமிஷன் முடக்கி வைத்துள்ளது.“இரட்டை இலை” சின் னத்தை பெற ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும் சசிகலா தலைமையிலான அணியினரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக இரு தரப்பினரும் ஆவணங்களை தேர்தல் கமிஷனில் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் “இரட்டை இலை” சின்னத்தை பெற அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி பேரம் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக டெல்லியில் நேற்று அதிகாலை சுகேஷ் சந்திர சேகர் என்ற இடைத்தரகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சம் பறி முதல் செய்யப்பட்டது.

அவர் டெல்லி போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில், “இரட்டை இலை” சின்னத்தை பெற்று கொடுக்க தினகரனிடம் ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டது. அவரிடம் இருந்து முதல் தவணையாக ரூ.10 கோடி பெற்றேன்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தினகரன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக் கைக்கு தீவிரமாகியுள்ளனர். இதற்காக உதவி கமிஷ னர் ஒருவர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.அந்த தனிப்படையில் இடம்பெற்றுள்ள போலீசாரில் சிலர் இன்று சென்னை வந்தனர். தினகரனிடம் விசாரணை நடத்துவதற்கான சம்மனுடன் அவர்கள் வந்தனர். தினகரனிடம் அவர்கள் சம்மனை வழங்க உள்ளனர். நாளை விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி பேரம் பேசியதற்கான ஆதாரங்களை டெல்லி போலீசார் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அவர்கள் தினகரனை கைது செய்து டெல்லிக்கு அழைத்து செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.இந்த தகவலால் அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. அ.தி.மு.க. மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் இன்று காலை பரபரப்புடன் காணப்பட்டனர்.

டி.டி.வி.தினகரனை டெல்லிக்கு அழைத்து சென்று சுகேசுடன் ஒன்றாக வைத்து விசாரிக்க டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் தேர்தல் அதிகாரி ஒருவருடன் சுகேஷ் சந்திரசேகர் ரகசிய தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

அந்த அதிகாரியிடம் தான் இடைத்தரகர் சுகேஷ் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. எனவே அந்த தேர்தல் அதிகாரியையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.இதற்கிடையே ரூ.50 கோடி பேரத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்ததில் டெல்லி வக்கீல் ஒருவர் முக்கிய பங்கு வகித்ததாக தெரியவந்துள்ளது. அந்த வக்கீலையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.வெளிநாட்டில் இருந்து ஹவாலா பணப்பரிமாற்ற அடிப்படையில் ரூ.50 கோடி பேரம் நடந்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த டெல்லி வக்கீலும் விரைவில் கைதாகக் கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.டெல்லி போலீசார் விசாரணை நடத்திய பிறகு ரூ.50 கோடி பேரம் பற்றி அமலாக்கத்துறை மூத்த அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அந்த விசாரணையில் ரூ.50 கோடி பேரத்துக்கான பண ஏற்பாடு பற்றிய புதிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரூ.50 கோடி பேரம் நடத்தப்பட்டதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்ற விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.டெல்லி குற்றப்பிரிவு போலீசாரிடம் எப்படி பதில் அளிப்பது என்பது பற்றி அவர் பெசன்ட் நகரில் உள்ள தன் வீட்டில் வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.தினகரன் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி இருந்ததால் நிறைய பேர் பெசனட் நகர் வீட்டில் குவிந்திருந்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.