டெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்

டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை கொலை மற்றும் தற்கொலை என இரு கோணங்களிலும் டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்த பிறகு தற்கொலைக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகவும், ஆனால் எந்தவித இறுதி முடிவுக்கும் வரவில்லை என்றும் குற்றவியல் பிரிவு போலீசார் கூறுகின்றனர்.

11 சடலங்களின் உடற்கூறாய்வு மெளலானா ஆசாத் மருத்துவக்கல்லூரியில் செய்யப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கண்தானம் செய்ய ஒத்துக்கொண்டிருந்தாலும், 11 பேரில் ஆறு பேரில் கண்களை மட்டுமே தானமாக பெற முடிந்தது.

அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த மரணங்கள் தொடர்பாக பல கேள்விகள் எழுகின்றன. அவை அனைத்திற்குமான விடை கிடைக்குமா என்பதை எதிர்காலம்தான் கூறவேண்டும். அதில் 11 கேள்விகளை மட்டும் பார்ப்போம்.

பாட்டியா குடும்பம் அந்த பகுதியில் அனைவருக்கும் நன்றாக அறிமுகமான, பிரபலமான குடும்பம். 77 வயது மூதாட்டி நாராயண் தேவியின் சடலம் ஒரு அறையில் தரையில் கிடந்தது. நாராயண் தேவியின் மூத்த மகன் புவனேஷ் என்னும் பூப்பி (50), அவரது மனைவி சவிதா (48) மற்றொரு மகன் லலித் (45), அவரது மனைவி டீனா (42), பூப்பியின் இரண்டு மகள்கள், ஒரு மகன் மற்றும் லலித்தின் 15 வயதான மகனும், நாராயண் தேவியின் மகளும், பேத்தி ப்ரியங்காவும் என பத்து பேரின் சடலங்கள் மற்றொரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை காலையில் பாட்டியா குடும்பத்தினரின் கடையில் பால் வாங்குவதற்காக சென்ற அண்டைவீட்டுக்காரர் குர்ச்சரண் சிங், கடை திறக்காததால் மேல் மாடியில் இருந்த வீட்டிற்கு சென்றார்.

“நான் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது, கதவுகள் எல்லாம் திறந்து கிடந்தன. அனைவரின் உடல்களும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தன. அவர்களின் கைகள் பின்னாலிருந்து கட்டப்பட்டிருந்தது. அத்தனை பேரும் தூக்கிட்டு இறந்த காட்சியை பார்த்தபோது மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். உடனே வீட்டிற்கு சென்று என் மனைவியிடம் கூறினேன். அவள் அங்கே போய் பார்க்க வேண்டும் என்றாள். நான் அவளை தடுத்து விட்டேன்” என்று கூறுகிறார் குர்ச்சரண் சிங்.

இங்கு நமக்கு எழும் முதல் கேள்வி என்னவென்றால், அனைவரும் தற்கொலை செய்துக்கொண்டிருந்தால், கதவு பூட்டப்படாதது ஏன்?

போலீஸ் இந்த மரணங்களை கொலை என்ற கண்ணோட்டத்திலும் விசாரிக்கிறது. பாட்டியா வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றிய இரண்டு ரெஜிஸ்டர்களில் சொர்க்கத்தைப் பற்றிய குறிப்புகள் எழுதப்பட்டுள்ளது.

அந்த ரெஜிஸ்டர்களில் காணப்படும் சில புகைப்படங்களில் முகம், கை கால்கள் கட்டப்பட்டிருப்பதாக காண்பிக்கப்பட்டிருக்கிறது, உண்மையில் அதைப்போலவே பாட்டியா குடும்பத்தினரின் சடலங்களின் முகம், கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்டிருக்கிறது.

நமது இரண்டாவது கேள்வி என்னவென்றால், அந்த ரெஜிஸ்டரில் இருப்பதைப் போன்றே இறக்க விரும்பி, பாட்டியா குடும்பத்தினர் கூட்டாக தற்கொலை செய்துக் கொண்டார்களா?

தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த பத்து பேரின் முகம், கண்கள் மற்றும் கைகள் அதில் கட்டப்பட்டிருந்தாலும், சிலரின் கைகள் கட்டப்படவில்லை. குடும்பத்தின் மூத்த உறுப்பினரான நாராயண் தேவி மட்டும் ஏன் தனியாக வீட்டின் மற்றொரு அறையின் தரையில் இறந்து கிடந்தார்? இது நமது மூன்றாவது கேள்வி.

அனைவரும் கூட்டாக தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்திருந்தாலும், அதில் யாராவது ஒருவர்கூடவா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? 11 சடலங்களிலும் எந்தவித காயமோ, அடி வாங்கிய அறிகுறியோ எதுவும் இல்லை என்று போலீஸ் கூறுகிறது.

நாராயண் தேவியின் 33 வயது பேத்தி ப்ரியங்காவிற்கு ஜூன் 17ஆம் தேதியன்று திருமண நிச்சயதார்தம் நடைபெற்றது. ஆகஸ்டில் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. இதுபோன்ற சுபநிகழ்வு வீட்டில் நடைபெற திட்டமிருந்த நிலையில், ஒட்டு மொத்த குடும்பமே சேர்ந்து எப்படி கூட்டாக தற்கொலை செய்துக் கொள்ளும் முடிவுக்கு வந்திருக்க முடியும்?

பாட்டியா குடும்பத்தினர் கடவுள் பக்தி மிக்கவர்கள் என்று அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். பூஜை புனஸ்காரங்களிலும், ஆன்மீக நிகழ்வுகளிலும் அனைவரும் ஆர்வம் கொண்டவர்கள். அதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்கவே மாட்டார்கள் என்று பிபிசியிடம் தெரிவித்தார் அவர்களது அண்டை வீட்டுக்காரரான சீமா.

புவனேஷ் தங்கள் வீட்டின் தரை தளத்தில் இருந்த இரண்டு கடைகளில் ஒன்றில் மளிகை கடை நடத்திவந்தார். மளிகை கடையில் நேர்மறையான நல்லக் கருத்துக்களை எழுதி வைப்பார் என்றும் சீமா தெரிவித்தார். ஆன்மீகத்தில் மூழ்கிப் போனதே இந்த குடும்பத்தின் அழிவுக்கு காரணமாய்ப் போனதா என்பதே எங்களது ஐந்தாவது கேள்வி.

வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றிய ரெஜிஸ்டர்களில் சொர்க்கம் மற்றும் பல்வேறு மந்திரங்கள், பூஜைகள் பற்றி எழுதப்பட்டிருப்பதை பார்க்கும்போது அவர்கள் தாந்த்ரீக உபாசனைகளில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது மர்மமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் வீட்டிற்கு, தாந்த்ரீகர்கள் , மந்திரவாதிகள் அல்லது பூசாரிகள் என யாரும் வந்து போனதை பார்த்ததில்லை என்று பாட்டியா குடும்பத்தின் அருகில் வசிப்பவர்கள் உறுதியாக கூறுகிறார்கள்.

அப்படியென்றால், வழக்கை திசை திருப்புவதற்காக போலியான ரெஜிஸ்டர்கள் வீட்டில் வைக்கப்பட்டதா என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது.

இந்த குடும்பத்தினருக்கு தாந்த்ரீகவாதி அல்லது பூசாரியுடன் தொடர்பு இருப்பதாக இதுவரை தெரியவில்லை, ஆனால் வீட்டின் இளைய மகன் லலித், நோயால் பாதிக்கப்பபட்டு வாய் பேசமுடியாமல் போய்விட்டதாம்.

குரல் போனபிறகு, அவர்கள் பல பூஜைகளை செய்து, ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டினார்கள். பிறகு, லலித்துக்கு பேசும்திறன் திரும்பி வந்துவிட்டதாம். பேசும் சக்தி திரும்பியதர்கு ஆன்மீக நம்பிக்கைதான் காரணம் என்று நினைத்தோ அல்லது யாரவது ஒருவர்தான் காரணம என்று நினைத்து அவரிடம் ஈடுபாடு கொண்டு, அவரின் தூண்டுதலால் குடும்பமே சேர்ந்து கூட்டாக தற்கொலை செய்துக் கொண்டதா?

ரெஜிஸ்டரில் லலித்தின் கையெழுத்து காணப்படுவதாக கூறப்படுகிறது. அப்படியென்றால், லலித் மட்டுமே தாந்திரீகத்தில் நம்பிக்கை வைத்திருந்தாரா?

பாட்டியாவின் மூன்றடுக்கு மாடி வீட்டின் வெளிச்சுவற்றில் 11 பைப்புகள் வெளியில் நீட்டப்பட்டபடி பொருத்தப்பட்டுள்ளன. இவை பயன்படுத்தப்பட்டதாக தெரியவில்லை.

Image caption
வீட்டின் வெளிப்புறச் சுவரில் வெளிநீட்டிக் கொண்டிருக்கும் 11 பைப்புகள்
இந்த வீட்டை கட்டிய மேஸ்திரி தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையில் நம்மிடம் சில விஷயங்களை தெரிவித்தார். லலித் பாட்டியா சொன்னதன்படியே வீட்டின் வெளிச் சுவரில் இந்த பைப்புகள் அமைக்கப்பட்டது என்றும், அதற்கு காரணம் கேட்டதற்கு வெளிக்காற்று உள்ளே வருவதற்காக இப்படி அமைப்பதாகவும் பதில் அளித்தார்கள் என்று அந்த மேஸ்திரி தெரிவித்தார்.

இந்த பைப்புகள் ஏன் பொருத்தப்பட்டன? அவற்றில் ஏழு பைப்புகள் வளைந்தும், நான்கு பைப்புகள் நேராகவும் இருக்கின்றன. இந்த பைப்புகள் அனைத்தும் அருகில் இருக்கும் காலி மனையைப் பார்த்து பொருத்தப்பட்டுள்ளன.

சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ரெஜிஸ்டரின் அடிப்படையில் இவை தற்கொலைகளாக இருக்கலாம் என்று டெல்லி போலிஸ் கூறுகிறது. வேறொரு கோணத்தில் இருந்து இந்த மரணங்களை போலீசார் அணுகியதாக தெரியவில்லை.

மூடநம்பிக்கை என்ற கோணத்தில் மட்டுமே போலீஸ் ஏன் இந்த வழக்கை பார்க்கவேண்டும்? கொலையாக இருக்கலாம் என்பதற்கான ஒரு சந்தேகத்திற்குரிய குறிப்பும் போலீசுக்கு இன்னமும் கிடைக்கவில்லையா?

பாட்டியா குடும்பம் வளமான குடும்பம் என்று அவர்களது உறவினர்கள் நம்புகின்றனர். அதே நேரத்தில், பணம் இல்லையென்றால், கடனுக்கு மளிகைப் பொருட்கள் கேட்டாலும், அவர்கள் கொடுப்பார்கள் என்று அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கூறுகின்றனர். எனவே பணப்பிரச்சனையும் இல்லை என்பது தெளிவாகிறது.

அவர்கள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கவே முடியாது என்று உறவினர்கள் உறுதியாக கூறுகின்றனர். அப்படியென்றால் உறவினர்கள் இதை கொலையாக பார்க்கிறார்களா? அப்படி என்றால அதற்கு காரணம் என்ன?

ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட பாட்டியா குடும்பத்தினர், கடந்த 20 ஆண்டுகளாக புராரியில் வாழ்ந்து வந்தனர். நாராயண் தேவியின் ஒரு மகள் சுஜாதா பானிபத்தில் வசிக்கிறார், மற்றொரு மகன் ராஜஸ்தானிலேயே இருக்கிறார். குடும்பத்தினரிடம் பெரிய அளவில் எதாவது சொத்து இருக்கிறதா? இது சொத்துக்காக நடந்த கொலையா என்ற தகவல் எதுவும் தெரியவில்லை.

இந்த கூட்டுக் குடும்பத்தினர் அனைவரும் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான காரணம் என்ன என்பதை போலீஸ்தான் கண்டறிய வேண்டும். அப்போது 11 பேரின் மரணம் தொடர்பான நமது 11 கேள்விகளுக்கும் விடை கிடைக்கலாம்.