டெல்லியில் இன்று இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதவிருந்த பயங்கர விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்ப்பு

புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோவா தலைநகர் பனாஜிக்கு செல்லவிருந்த “Delhi-Goa AI156” ஏர் இந்தியா விமானம் இன்று காலை 11.15 மணியளவில் 28-வது ஓடுபாதை வழியாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது, அதே ஓடுபாதையில் ராஞ்சியில் இருந்து வந்த இன்டிகோ விமானமும் எதிர் திசையில் தரையிறங்கியது. நல்லவேளையாக கோவா புறப்பட்டு சென்ற விமானத்தின் விமானி இதை கவனித்து விட்டார்.

இதையடுத்து, வேகத்தை குறைத்து தரையிறங்கும் ஏர் இன்டிகோ விமானத்துக்கு அவர் வழி ஒதுக்கி தந்தார். விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு இதைப் பார்த்த அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர். இதனால், இரு விமானங்களும் நேருக்கு நேராக மோதவிருந்த பெரும் அசம்பாவிதம் சில நொடிப் பொழுதுகளின் வித்தியாசத்தில் தவிர்க்கப்பட்டது.

இவ்வாறு தவிர்க்கப்படாமல் இருந்திருந்தால், இரு விமானங்களும் ஒன்றோடொன்று மோதி ஏர் இந்தியா விமானத்தில் கோவாவுக்கு சென்ற 122 பயணிகளும் ராஞ்சியில் இருந்து வந்த விமானத்தில் இருந்த பயணிகளும் பெரும் கோர விபத்தில் சிக்கி இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.