டெங்குவை விட மோசமானது எடப்பாடியின் ஆட்சி: தினகரன் தாக்கு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தும் நடவடிக்கை இல்லையே என்ற கேள்விக்கு டெங்குவை விட மோசமான அரசாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு உள்ளதாக தினகரன் பேட்டி அளித்தார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறியதாவது:

ஜெயலலிதா மரணம் மர்மம் பற்றி அமைச்சர்களே தெரியாது என்கிற ரீதியில் பேசுகிறார்களே?

ஜெயலலிதா இறந்து சில நாட்களில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக சசிகலாவை பொதுச்செயலாளர் ஆகவேண்டும் என்று கெஞ்சி கூத்தாடி ஒத்துக்கொள்ள வைத்தது யார். இதே அமைச்சர்கள் அவர் காலில் விழுந்ததை நாடே பார்த்தது.

திண்டுக்கல் சீனிவாசன் சசிகலாவை பொதுச் செயலாளர் மட்டுமல்ல முதல்வராகவும் வர வேண்டும் என்று கூட்டத்தில் பேசினார்.

அன்று இதே எடப்பாடி, ஓபிஎஸ் எதிர்க்கட்சித்தலைவருடன் சிரித்துப் பேசுகிறார் என்று தினமும் குறை சொன்னவர். ஓ.எஸ்.மணியன் எம்ஜிஆரையே எதிர்த்து எஸ்டி.சோமசுந்தரத்துடன் சென்ற விசுவாசமிக்க தொண்டர். இன்று அவர் சட்டதிட்டம் பற்றி பேசுகிறார்.

எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜானகி ராமச்சந்திரன் முதல்வராக முடியவில்லை. ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா கைகாட்டிய ஓபிஎஸ் எந்த எதிர்ப்புமில்லாமல் முதல்வரானார். அந்த அளவுக்கு கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.

இன்று சசிகலாவை விமர்சிப்பவர்கள் அன்று அவர் மூலம் அமைச்சர் பதவி பெற்றவர்களே, தம்பிதுரை நாடாளுமன்றத்துக்கு கூட செல்லாமல் காலை 7-30 மணிக்கு போயஸ் கார்டனுக்கு வந்தால் நள்ளிரவு தான் வீட்டுக்கு போவார். ஜெயலலிதாவை மக்கள் முதல்வராக்கி அழகு பார்த்தார்கள், எடப்பாடி பழனிசாமியை அப்படி வைத்து பார்க்க விரும்புவார்களா? காலம் மாறும் அன்று இவர்கள் தேர்தலில் நிற்கும் போது மக்கள் தூக்கி எறிவார்கள்.

திமுக சார்பில் ஓபிஎஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி வழக்கு போடப்பட்டுள்ளதே?

நாங்களே அதற்கான முயற்சியில் தான் இருந்தோம், அதற்குள் தகுதி நீக்க பிரச்சனை வந்துவிட்டது. ஆனாலும் நாங்களும் வழக்கு தொடுப்போம். திமுகவினர் வழக்கு போட காரணம் உரிமைக்குழுவில் அவர்கள் தரப்பு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பதால் தான்.

அனைத்து 23 ஆம் புலிகேசிகளும் ஒரு நாள் மக்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

23 ஆம் புலிகேசி என்று அமைச்சர்களை சொல்லலாமா?

23 ஆம் புலிகேசி தவறான வார்த்தை அல்ல அவர் பெரிய மன்னர். இவர்கள் 32 ஆம் புலிகேசிகள். ஒரு பாடகர் பெயரைக்கூடச் சொல்லத்தெரியாத அளவுக்கு அமைச்சர்கள் உள்ளனர்.

ஜெயலலிதாவால் அமைச்சர் ஆக்கப்பட்டவர்கள்தானே அவர்கள்?

ஆமாம் ஜெயலலிதாவால் தான் அமைச்சர்களாக்கப்பட்டார்கள். ஜெயலலிதா இருந்தவரை அவர் தன்னுடைய அனைத்து துறைகளையும் பார்த்துக்கொண்டார். இவர்கள் வாய் பொத்திதான் நிற்பார்கள், அதன் பின்னர் தானே தனியாக செயல்படும்போது இவர்கள் யாரென்று தெரிகிறது.

அரசியல் தலைவர்களாக இவர்கள் சரியானவர்கள். ஆனால் எம்.எல்.ஏக்களாக, எம்.பிக்களாக , அமைச்சர்களாக செயல்படுவதைத்தான் குறிப்பிடுகிறேன்.

குடகு மலையில் உள்ள நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் எப்போது வருவார்கள்?

உயர் நீதிமன்றம் அவர்கள் தொகுதியை காலி என அறிவிக்ககூடாது என்று சொல்கிறது. நீங்கள் அரசாங்கம் சொல்வதை கேட்கிறீர்கள். நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்வீர்களா? இந்த அரசு சொல்வதை ஏற்றுக்கொள்வீர்களா? முன்னாள் அமைச்சர்கள் செந்தில், பாலாஜி பழனியப்பன் மீதே இவர்கள் நடவடிக்கை எடுக்கும் போது எம்.எல்.ஏக்கள் வெளியே வந்தால் விட்டு வைப்பார்களா.

தமிழக அரசின் இணையதளத்தில் 18 எம்.எல்.ஏக்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதே?

அதற்கும் அவர்கள் பிரச்சனையை எதிர்கொள்வார்கள். நீதிமன்ற அவமதிப்பு கட்டாயம் வரும். அப்போது யாரையாவது அதிகாரிகளை பலிகடாவாக்குவார்கள்.

தமிழகத்தில் டெங்குவால் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர் அரசு நடவடிக்கை துரிதமாக இல்லையே?

சுகாதாரத்துறைக்கு ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் எதற்காக அடிக்கடி டெல்லிக்கு போய் தவம் கிடக்கிறார் தெரியவில்லை. இந்த அரசு டெங்குவை விட மோசமான அரசு இந்த அரசு அகன்றால் தான் எல்லாவற்றிற்கும் விடிவு கிடைக்கும்.