டுவிட்டரில் ஆபாச படங்கள் பரவுவதை தடுக்க வேண்டும் நடிகர்கள் ஆர்யா, விவேக் வற்புறுத்தல்

சினிமா பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களும் படுக்கை அறை வீடியோக்களும், மது அருந்தி நடனம் ஆடும் படங்களும் வெளியாகி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், பாபி சிம்ஹா, நடிகைகள் திரிஷா, ஹன்சிகா, ஆன்ட்ரியா, அனுயா, சஞ்சிதா ஷெட்டி உள்பட பலரது பெயர்களை பதிவு செய்து இந்த படங்கள் வெளிவந்தன.

அமலாபால், பார்வதி நாயர் உள்பட மேலும் சில நடிகைகள் படங்கள் தொடர்ந்து வெளிவரும் என்றும் அறிவிப்பு வந்தது. இதனால் நடிகர்-நடிகைகள் மத்தியில் பதற்றமும் பீதியும் ஏற்பட்டது. சுசித்ரா தனது டுவிட்டர் கணக்கை ஹேக் செய்து மர்ம நபர்கள் இந்த படங்களை வெளியிட்டு இருப்பதாக குற்றம்சாட்டி டுவிட்டரை மூடிவிட்டு வெளியேறி விட்டார். ஆனாலும் அவரது பெயரில் புதிய டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து ஆபாச படங்கள் வெளியாகின்றன.

இது குறித்து நடிகர் ஆர்யா கூறியதாவது:-

“நடிகர்-நடிகைகள் பெயரில் ஆபாச படங்களும் வீடியோக்களும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருவது வருத்தம் அளிக்கிறது. விளம்பரம் தேடுவதற்காகவே இவற்றை வெளியிடுகிறார்கள். புதிய டிரென்ட்டாக மாறிவரும் இந்த கலாசாரத்தை தடுக்க வேண்டும். பிரபலமானவர்கள் பெயரில் வரும் வீடியோக்கள் மற்றும் படங்கள் அனைத்தும் போலியானவை.

எதிர்காலத்தில் இதுபோல் நிறைய படங்கள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. இது சமூகத்துக்கு நல்லது அல்ல”.

இவ்வாறு ஆர்யா கூறினார்.

நகைச்சுவை நடிகர் விவேக் கூறியதாவது:-

“அறிவுப்பெருவெளியாக இருக்க வேண்டிய பொது வெளி தற்போது காமக்கழிவிடமாய் மாறி வருகிறது. இது விபரீதம். தனி மனித ஆசா பாசங்கள் அவரவர் உரிமை. அவற்றை திருடி இணையத்தில் கொண்டு வந்து கொட்டுவது பெரும் வக்கிரம். இதை குழந்தைகளும், மாணவர்களும், குடும்ப பெண்டிரும் பார்க்கும் அவலம்.

உடனடியாக அரசு சைபர் கிரைம் உதவியுடன் இதை தடுக் கவும் நெறியாளவும் வேண்டும். இந்திய கலாசாரமே தாய்மை, பெண்மை போற்றுதல்தான். அதை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்’.’

இவ்வாறு விவேக் கூறினார்.