டி.டி.வி.தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல் இன்று சென்னைக்கு அழைத்து வருகிறார்கள்

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

விசாரணை

இந்த வழக்கில் முதலில் கடந்த 16–ந் தேதி டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சத்தையும், 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தியபோதுதான், அவர் மூலம் டி.டி.வி.தினகரன் தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரனை டெல்லிக்கு வரவழைத்து கடந்த சனிக்கிழமை முதல் 4 நாட்கள் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். இதேபோல் அவரது உதவியாளர் ஜனார்த்தனன், நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அ.தி.மு.க. வக்கீல் பி.குமாரிடம் நேற்று முன்தினம் ஒரு நாள் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

டி.டி.வி.தினகரன் கோர்ட்டில் ஆஜர்

4–வது நாள் விசாரணை நடந்து முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு டி.டி.வி.தினகரனை போலீசார் கைது செய்தனர். தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது பற்றி சுகேஷ் சந்திரசேகருடன் டி.டி.வி.தினகரன் தொலைபேசியில் பேசியதற்கான ஒலிப்பதிவு ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. டி.டி.வி.தினகரனுடன் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, அவர்கள் இருவரையும் டெல்லி லஞ்ச ஒழிப்பு தனி கோர்ட்டில் நீதிபதி பூனம் சவுத்ரி முன்பு நேற்று பிற்பகல் 3 மணிக்கு போலீசார் ஆஜர்படுத்தினார்கள். இதற்காக அவர்களை டெல்லி போலீஸ் உதவி கமி‌ஷனர் சஞ்சய் ஷெராவத் தனது காரிலேயே அழைத்து வந்தார்.

போலீஸ் தரப்பில் மனு

அவர்கள் இருவரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் வக்கீல் பல்பீர் சிங் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மேலும் டி.டி.வி.தினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமான உரையாடல் பதிவுகள் மற்றும் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி பூனம் சவுத்ரி,
ரூ.50 கோடி கைமாறியதாக போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் ரூ.1 கோடியே 30 லட்சம்தானே பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த தொகையை மட்டும்தானே முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

ஹவாலா மூலம் பண பரிமாற்றம்

அதற்கு வக்கீல் பல்பீர் சிங், ‘‘டெல்லிக்கு ஹவாலா மூலம் முதலில் ரூ.10 கோடி வந்து சேர்ந்துள்ளது. இதில்
ரூ.1 கோடியே 30 லட்சம் முதலில் கைதான சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. மீதம் உள்ள ரூ.8 கோடியே 70 லட்சம் எங்கே என்று தெரியவில்லை. மேலும் தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள், அரசு அதிகாரிகளுடன் அவருக்கு உள்ள தொடர்பு பற்றியும் விசாரிக்க வேண்டி இருக்கிறது’’ என்றார்.

விசாரணையின் போது சுகேஷ் சந்திரசேகர், ஜனார்த்தனன் ஆகியோர் பல முக்கிய தகவல்களை தெரிவித்து இருப்பதாகவும், மேலும் 16 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரிக்க இருப்பதாகவும் அப்போது அவர் கூறினார்.

செல்போன்கள்

சுகேஷ் சந்திரசேகரை தொடர்பு கொண்டு பேச பல செல்போன்களை டி.டி.வி.தினகரன் பயன்படுத்தி இருப்பதாகவும், அவற்றை போலீசார் கைப்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாகவும், விசாரணைக்காக அவரையும், சுகேஷ் சந்திரசேகரையும் சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டி இருப்பதாகவும் பல்பீர் சிங் தனது வாதத்தின் போது தெரிவித்தார்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் தேர்தல் முறையின் புனிதத்தன்மையை குறைத்து மதிப்பிட்டு விட்டதாகவும், இவர்கள் தங்கள் விருப்பத்துக்காக எதையும் செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.

வக்கீல் எதிர்ப்பு

ஆனால் டி.டி.வி.தினகரன் சார்பில் ஆஜரான வக்கீல் விகாஸ் பவா, அவரை கைது செய்ததற்கும், போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் வாதாடுகையில் கூறியதாவது:–
கடந்த 22–ந் தேதி முதல் டி.டி.வி.தினகரனின் செல்போனை போலீசார் பறித்து வைத்துக்கொண்டு அவரிடம் ஏற்கனவே 4 நாட்கள் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு வழங்கினார். எனவே அவரை போலீசார் கைது செய்தது தவறு. அவரை கைது செய்ததற்கு சரியான காரணத்தையோ, உறுதியான காரணத்தையோ போலீசார் தெரிவிக்கவில்லை.

டெல்லி ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புகளின்படி, குற்றம்சாட்டப்பட்டவர்களை எல்லா வழக்குகளிலும் கைது செய்ய முடியாது. மிகவும் அபூர்வமாகத்தான் கைது செய்யவேண்டும். எனவே டி.டி.வி.தினகரனை மேலும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

5 நாள் போலீஸ் காவல்

அதற்கு நீதிபதி பூனம் சவுத்ரி, 4 நாட்கள் டி.டி.வி.தினகரனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கலாம் என கூறினார்.

அப்போது உதவி கமி‌ஷனர் சஞ்சய் ஷெராவத், ‘‘இந்த விவகாரத்தில் ஹவாலா பணம் பரிமாறப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 2 பேரையும் சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். எனவே 7 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

இப்படி இருதரப்பினரும் மாறி மாறி வற்புறுத்தியதால் கோர்ட்டு நடவடிக்கைகளை சிறிது நேரம் ஒத்திவைத்த நீதிபதி பூனம் சவுத்ரி, அதன்பிறகு 5 நாட்கள் டி.டி.வி.தினகரனையும், மல்லிகார்ஜூனாவையும் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். கோர்ட்டு உத்தரவின்படி, போலீஸ் காவல் விசாரணையின்போது டி.டி.வி.தினகரனுடன் அவருடைய வக்கீல் ஒருவரும் உடன் இருக்க அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

உதவியாளர் ஜனார்த்தனன்

இந்த விசாரணை 45 நிமிடம் நடைபெற்றது. அப்போது கோர்ட்டு அறைக்குள் செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த வழக்கில் டி.டி.வி.தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனன் விசாரணைக்கு பின்னர் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டார்.

ஜனார்த்தனன் நேற்று கோர்ட்டு வளாகத்துக்கு வந்திருந்தார். அங்கு நின்று கொண்டிருந்த நிருபர்களிடம் அவர் பேசுகையில், டி.டி.வி.தினகரனுக்கு எதிரான ஆதாரங்கள் ஜோடிக்கப்பட்டவை என்றார்.

சென்னைக்கு அழைத்து வருகிறார்கள்

விசாரணை முடிந்ததும் டி.டி.வி.தினகரனையும், மல்லிகார்ஜூனாவையும் போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவர்கள் இருவரையும் விசாரணைக்காக டெல்லி போலீசார் விமானம் மூலம் இன்று (வியாழக்கிழமை) மதியம் சென்னைக்கு அழைத்து வருகிறார்கள்.

இதேபோல் கொச்சி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர். ரூ.10 கோடி பணம் எங்கிருந்து, யார்–யார் கைமாறி, எந்த வழியாக டெல்லிக்கு அனுப்பப்பட்டது? என்பதை நேரடியாக அறிந்து கொள்ளும் விதமாக போலீசார் மேற்கண்ட இடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று விசாரிக்க இருக்கிறார்கள்.

மேலும் சென்னையில் உள்ள டி.டி.வி.தினகரனின் இல்லத்தில் சோதனை நடத்தவும் கோர்ட்டின் அனுமதியை போலீசார் பெற்று உள்ளனர். இதேபோல் மல்லிகார்ஜூனாவின் வீட்டில் சோதனை போடவும் அனுமதி பெற்று இருக்கிறார்கள்.

7 அதிகாரிகள் மீது சந்தேகம்

டெல்லிக்கு ஹவாலா மூலம் வந்து சேர்ந்த ரூ.10 கோடியில் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடியே 30 லட்சம் போக, மீதமுள்ள ரூ.8 கோடியே 70 லட்சம் யார்–யாரிடம் கொடுக்கப்பட்டு உள்ளது? என்ற கேள்விக்கு போலீசார் பதில் அளிக்க வேண்டி உள்ளது.

இந்த பணம் தேர்தல் கமி‌ஷனுடன் தொடர்பில் இருக்கும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த வகையில் 7 அதிகாரிகள் மீது போலீசார் சந்தேகம் கொண்டுள்ளனர். அவர்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோருக்கு போலீஸ் காவல் விசாரணை முடியும் போது, அந்த அதிகாரிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனைவி–மகள் சந்திப்பு

முன்னதாக நேற்று டெல்லி குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த டி.டி.வி.தினகரனை அவரது மனைவி அனுராதா மற்றும் மகள் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது டி.டி.வி.தினகரன் தான் அணிந்திருந்த சங்கிலி, மோதிரம், கைக்கெடிகாரம் ஆகியவற்றை கழற்றி தனது மனைவியிடம் கொடுத்தார்.