டிரம்ப் பதிவை நீக்கியது பேஸ்புக்; கணக்கையே முடக்கியது டுவிட்டர்

கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவலை பதிவிட்ட காரணத்துக்காக, அமெரிக்க அதிபர் டிரம்பின் பதிவை, முதன் முறையாக பேஸ்புக் நீக்கியது; அவரது தேர்தல் பிரசார டுவிட்டர் கணக்கை முடக்கி டுவிட்டர், நடவடிக்கை எடுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் தேர்தல் பிரசார டுவிட்டர் கணக்கில், பாக்ஸ் நியூஸ் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியின் வீடியோ பகிரப்பட்டிருந்தது. அதில், குழந்தைகளுக்கு வலுவான எதிர்ப்பு சக்தி உள்ளதால், பள்ளிகள் திறக்கலாம் என தெரிவித்திருந்தார். மேலும், குழந்தைகளுக்கு கொரோனா எளிதில் பரவாது எனவும், வீட்டில் உள்ளவர்களுக்கு அவர்கள் கொரோனாவை கொண்டு செல்ல மாட்டார்கள் எனவும் தெரிவித்திருந்தார். அவரது கருத்து முற்றிலும் தவறானது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா குறித்து தவறான தகவலை பதிவிட்டதால், அவரது பதிவை முதன்முறையாக நீக்கி பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. தவறான பதிவை நீக்கினால் மட்டுமே மீண்டும் டுவிட் செய்ய முடியும் என்ற டுவிட்டர் நிறுவனத்தின் விதிமுறைப்படி, டிரம்பின் தேர்தல் பிரசார டுவிட்டர் கணக்கை அந்நிறுவனம் முடக்கியது.