டிரம்புடன் என்ன பேசினேன்? டிவிட்டரில் மனம் திறந்தார் மோடி

புது தில்லி: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், நேற்று இரவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, டிரம்புடனான தொலைபேசி பேச்சு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியா, அமெரிக்காவின் உண்மையான தோழன் என்று டிரம்ப் கூறினார்.

இரு நாட்டு உறவுகளும் மேம்படும் வகையில், வருங்காலத்தில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட இருவரும் அப்போது ஒப்புக் கொண்டோம். தன்னை அமெரிக்கா வருமாறு டிரம்ப் அழைப்பு விடுத்தார். அவரும் இந்தியாவுக்கு வருகை தருமாறு நான் அழைத்துள்ளேன் என்று மோடி பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவின் 45-ஆவது அதிபராக கடந்த 20-ஆம் தேதி டிரம்ப் பதவியேற்றார்.  ‘அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய 5-ஆவது வெளிநாட்டுத் தலைவர் மோடி’ என்று வெள்ளை மாளிகை ஊடகத் துறை செயலாளர் சீன் ஸ்பைசர் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த 21-ஆம் தேதி கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ருதேவ், மெக்ஸிகோ பிரதமர் பெனா நீட்டோ ஆகியோரிடம் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். அதைத் தொடர்ந்து 22-ஆம் தேதி இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு, 23-ஆம் தேதி எகிப்து அதிபர் அப்துல் ஃபதா அல்-சிசி ஆகியோரிடம் தொலைபேசியில் பேசினார். இதைத் தொடர்ந்து 5-ஆவது உலகத் தலைவராக மோடியிடம் டிரம்ப் பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது பெரும்பான்மையான இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் அவருக்கு ஆதரவளித்தனர். நியூஜெர்ஸியில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய டிரம்ப், ” இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.
மோடியின் நிர்வாகத்தையும், பொருளாதாரச் சீர்திருந்த நடவடிக்கைகளையும் வரவேற்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன். இந்தியா அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளி’ என்று தெரிவித்திருந்தார்.

COMMENTS

Comments are closed.