டிடிவி ஆதரவாளர்கள் அதிமுக கரைவேட்டி கட்டியிருந்தால் உருவுங்கள்: அமைச்சர் மணிகண்டன் ஆவேசம்

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வேட்டியை உருவுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அமைச்சர் மணிகண்டன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டிடிவி தினகரன் அணியினர் நாளுக்கு நாள் வேகம் பெற்று வருவது அதிமுக அமைச்சர்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது. திமுக, அதிமுக மோதல் என்பதை விட டிடிவி அணியினர், அதிமுக அமைச்சர்கள் சொல்லாடல் பேசுபொருளாகி வருகிறது.

தனிப்பட்ட முறையில் பேய், பிசாசு, பைத்தியம், கீழ்ப்பாக்கம் கேசு என்று திட்டும் அளவுக்கு தரம் தாழ்ந்த விமர்சனத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நேற்று ராமநாதபுரத்தில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் மணிகண்டன் டிடிவி ஆட்கள் குறித்து பேசும்போது ஆவேசமானார்.

அதிமுக கட்சிக்கொடி, கரைவேட்டி கட்ட நீங்கள் யாருடா என ஒருமையில் பேசிய அவர், உங்கள் குக்கர் சின்னத்தை தூக்கிக்கொண்டு தலையில் வைத்துக்கொண்டு ஊர் ஊராய் சுற்றுங்கள், இனி அதிமுக கரைவேட்டியை யாராவது கட்டுவதைப்பார்த்தால் அம்புட்டு பயலையும் போலீஸில் கம்ப்ளைண்ட் பண்ணி தூக்கி உள்ளே வைத்து விடுவேன் என்று பேசினார்.

அதன் பிறகு மேலும் ஆவேசமடைந்த அவர், ‘இனி டிடிவி ஆட்கள் யாராவது அதிமுக கரைவேட்டி கட்டினால் அவர்களை கண்ட இடத்தில் அவர்கள் வேட்டியை உருவுங்கள். என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறினார்.

அதிமுக தொண்டர்களை அமைச்சரே மோதலுக்குத் தூண்டும் விதத்தில் பேசியதைப் பார்த்து மேடையில் அமர்ந்திருந்த நிர்வாகிகள் நெளிந்தனர்.