டமாஸ்கஸ் ராணுவ முகாம்களை தாக்கிய இஸ்ரேல்: சிரியா குற்றச்சாட்டு

இஸ்ரேல் நாட்டு ஏவுகணைகள் டமாஸ்கஸ் ராணுவ முகாம்களில் தாக்குதல் நடத்துவதாக சிரியா குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து சிரியா ராணுவம் தரப்பில், “இஸ்ரேல் நாட்டு ஏவுகணைகள் சிரியாவின் டமாஸ்கஸ் புறப்பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம்களை தாக்கியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. அதிகாலை 2.40 மணியளவில் லெபனான்னிலிருந்து ஏவுகணை வீசப்பட்டன. அதனைத் தொடர்ந்து இஸ்ரேலின் வடபகுதியிலிருந்து ஏவுகணைகள் பல வீசப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை தாக்குதல் பொருட் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் சிரியா கூறியுள்ளது. ஆனால் சிரியாவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க இஸ்ரேல் ராணுவம் மறுத்துவிட்டது.

சிரியாவில் உள் நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது லெபனான் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் பல வான் வழித் தாக்குதலை சிரியாவில் நடத்தியது குறிப்பிடத்தக்கது.