ஞானம் இதழ் ஆசிரியர் திரு.தி.ஞானசேகரன் அவர்கள் இலக்கியப் பயணம் மேற்கொண்டு கனடா வருகை தந்தபோது அவரை உதயன் பத்திரிகைக்காக நேர்கண்டவர் எழுத்தாளர் குரு அரவிந்தன்

(இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் இதழ் ஆசிரியர் திரு.தி.ஞானசேகரன் அவர்கள் இலக்கியப் பயணம் மேற்கொண்டு கனடா வருகை தந்தபோது அவரை உதயன் பத்திரிகைக்காக நேர்கண்டவர் எழுத்தாளர் குரு அரவிந்தன்.)
1. வணக்கம். நீங்கள் தம்பதிகளாக கனடா நாட்டுக்கு வருகை தந்திருக்கிறீர்கள். கனடிய இலக்கிய அன்பர்கள் சார்பில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். எம்மவர்கள் புலம்பெயர்ந்த வேறு நாடுகளுக்குச் சென்றிருக்கிறீர்களா?
பதில் : நன்றிஇ மிக்க மகிழ்ச்சி. எம்மவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளான டென்மார்க், ஜேர்மனி, சுவற்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறோம்.
2. அந்த நாடுகளில் எம்மவர்கள் ஆற்றும் தமிழ் இலக்கிய சேவைகளோடு எம்மவர்கள் ஆற்றும் சேவையை ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா?
பதில்: எம்மவர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழி, தமிழர்தம் கலை கலாசாரம், பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றை மேம்படுத்த பலவாறான முயற்சிகளை மேற்கொள்வதை அறிய முடிந்தது. அவற்றை எனது பயண இலக்கிய நூல்களிலும் பதிவு செய்துள்ளேன். ஏனைய நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் முயற்சிகளைவிட கனடாவில் கூடுதலான செயற்பாடுகளைக் காணமுடிகிறது. அதற்கு கூடுதலான தமிழர்கள் கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்வது காரணமாக இருக்கலாம்.
3. ஞானம் சஞ்சிகையை 18 ஆண்டுகள் தொடராக வெளியிடுகிறீர்கள் அதன் நோக்கம், செயற்பாடுகள் பற்றி கூறுங்கள்.
பதில்: ஈழத்துச் சிறுசஞ்சிகைகளின் நோக்கம், ஈழத்து இலக்கியப் பரப்புக்கு ஏதாவது பணி செய்ய வேண்டும் என்பதே. ஈழத்து இலக்கியப் பரப்பில் கருத்தியல் மாற்றம் காலத்துக்குக் காலம் ஏற்பட்டு வந்திருக்கிறது. ஆரம்பத்தில் முற்போக்கு இலக்கியம் இருந்தது. போர்க்காலத்தில் தமிழ்த் தேசிய இலக்கியம் என்ற கருத்தியலாக இலக்கிய வடிவம் பெற்றது. அதுபோல புலம்பெயர்ந்தவர்களின் இலக்கியம் வந்தது. தற்போது போருக்குப் பின்னரான இலக்கியம் முனைப்புப் பெற்றுள்ளது. இப்படியே மாற்றமடைந்து வரும் சமகாலத்து இலக்கியப் போக்கை பதிவு செய்ய வேண்டிய தேவை சிற்றிதழ்களுக்கு இருக்கிறது. ஞானம் சஞ்சிகை அதனைத்தான் செய்கிறது. ஈழத்தின் சமகால இலக்கியச் செல்நெறியை உலக நிலையிலான தமிழிலக்கியச் செல்நெறியுடன் தொடர்புபடுத்தி இயங்கும் சஞ்சிகையாக ஞானம் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஈழத்துச் சஞ்சிகை வரலாற்றில் மாதத்தின் முதல் வாரத்திலேயே இணைய இதழாகவும் அச்சு இதழாகவும் வெளிவரும் சஞ்சிகை என்ற பெருமை ஞானம் சஞ்சிகைக்கு உண்டு. ஈழத்தில் முதன் முதலாக இணையம் ஏறிய சஞ்சிகையாகவும் (2002), தமிழ் – கணினி இணைப்பு முறையில் மாதந்தோறும் பெருந்தொகையான வாசகர்களையும் படைப்பாளிகளையும் சென்று சேரும் சஞ்சிகையாகவும் ஞானம் திகழ்கிறது.
இலக்கியச் செயற்பாடுகள் காலத்துக்குக் காலம் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியமானது. போர்க்காலத்திலும் அதற்குப் பின்னரான இன்றைய காலகட்டத்திலும் மிகவும் சிரமமானதும் அச்சுறுத்தலானதுமான ஒரு சூழ்நிலையிலேதான் நாம் இப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். முன்னைய ஈழத்து இலக்கியச் சஞ்சிகைகள் செய்த இலக்கியப் பணியின் தொடர் சங்கிலியை நாம் பேணி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம் என்ற உணர்வுடன் செயற்பட்டு வருகிறோம். சிறுசஞ்சிகைகளுக்கு இன்னுமொரு முக்கிய பணியும் இருக்கிறது. புதிய எழுத்தாளர்களைத் தோற்றுவிப்பதும் அவர்களை வளர்த்தெடுப்பதும் சிறுசஞ்சிகைகளின் பணியாகிறது. ஞானம் சஞ்சிகையில் புலம்பெயர் எழுத்தாளர்கள் சிலர் உட்பட 50க்கும் மேற்பட்ட புதிய எழுத்தாளர்கள் தோன்றி வளர்ந்திருக்கிறார்கள் என்பது முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது. சஞ்சிகை வெளியிடுதல் என்ற வரலாற்று அஞ்சல் ஓட்டத்தில் அடுத்தகட்ட கைத்தடியை பெற்றுக் கொள்வதற்காக புதிதாகத் தோன்றி வளர்ந்த எழுத்தாளர்கள் ஒரு சிலராவது இருக்கத்தான் செய்வார்கள். புலம்பெயர் நாடுகளில் சிறு சஞ்சிகைகள் வெளியிடுபவர்களுக்கு ஈழத்து இலக்கியம் என்ற பிரக்ஞையுடன் வெளியிட வேண்டிய தேவை இருப்பதில்லை. ஏனெனில் அவர்கள் பல்வேறு நாடுகளில் நிலைபேறு கொண்டுள்ளார்கள். ஈழத்துச் சிறுசஞ்சிகையாளனின் பொறுப்பு அதிகமானது, சிரமமானது, ஆத்ம திருப்தி தருவது.
4. ஈழத்து தமிழ் இலக்கியம், புலம்பெயர் தமிழ் இலக்கியம் சர்வதேச தமிழ் இலக்கியம் என்றெல்லாம் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்களே இதைப்பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: உலகத்தின் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ்ச் சமூத்தினரிடமிருந்து வேறுபட்டு நிலத்தால், வரலாற்றால், அரசியலால், வாழ்க்கை முறைகளால், பண்பாட்டால் தனித்தன்மை கொண்டவர்களாக ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். ஈழத்தமிழரின் பேச்சுமொழி, வாழ்க்கைச் சூழல், சமூகக்கட்டமைப்பு, சமூக இயக்கமுறைமை, சமூகப் பிரச்சினைகள், இனவிடுதலைப் போராட்டம் போன்றவையெல்லாம் ஈழத்து இலக்கியத்தை தனித்துவமானதாக ஆக்கியிருக்கிறது. இது ஏனைய நாட்டு இலக்கியங்களிலிருந்து வேறானது. அதற்கான சிறப்பியல்புகளைக் கொண்டது.
போர் காரணமாக ஈழத்தில் இருப்பது பாதுகாப்பில்லை என்று அஞ்சி பல்வேறு நாடுகளுக்கும் சென்ற ஈழத்தவர்கள் படைக்கும் இலக்கியம் புலம்பெயர் இலக்கியம் என அழைக்கப்படுகிறது. புலம்பெயர் இலக்கியமானது ஈழத்து இலக்கியத்தின் நீட்சி எனக் கொள்ளப்படுகிறது. அதாவது ஈழத்து இலக்கியம் ஈழத்து இலக்கியமாக மட்டுமல்லாமல் புலம்பெயர் இலக்கியமாகவும் உள்ளது. இது ஈழத்தமிழர்கள் படைக்கும் இலக்கியமாக இருக்கிறதேயொழிய இந்தியத் தமிழர்களின் இலக்கியமாக இருப்பதில்லை.
இலக்கியங்கள் தேசிய, புவியியல், பண்பாடு மற்றும் வாழ்வியல் அமைவுகளுக்கு ஏற்ப பெயர்கொண்டு சுட்டும் மரபே வழக்காக இருந்து வருகிறது. உதாரணமாகக் கூறுவதனால் ஈழத்து இலக்கியம், தமிழக இலக்கியம், மலேசியத் தமிழ் இலக்கியம், சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் போன்றவற்றைக் கூறலாம்.
இதே போன்றுதான் புலம்பெயர்ந்தோர் இலக்கியங்களை கனடியத் தமிழ் இலக்கியம், அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியம், ஐரோப்பியத் தமிழ் இலக்கியம் என்று பெயர் சுட்டும் அளவுக்கு தற்கால புலம்பெயர் இலக்கியங்கள் பெயர்சுட்டி வகைப்படுத்தவேண்டிய பொருட்பரப்பைக் கொண்டுள்ளன.
தற்போது அடுத்தகட்டமாக தமிழ் இலக்கியப் பரப்பானது ஒரு நாட்டின் தேசிய புவியியல் பண்பாடு மற்றும் அங்குள்ள வாழ்வியல் அமைவுகளையும் தாண்டி இலக்கியங்கள் புலம்பெயர் நாடுகளில் படைக்கப்படுவதைக் காண்கிறோம். இது சர்வதேசத் தமிழ் இலக்கியம் என்ற பொது அடையாளத்தைப் பெறுவிடுவதற்கான சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளமையைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் சர்வதேச தரத்திலான இலக்கியங்களைப் படைப்பதையிட்டு நாம் மகிழ்வடைகிறோம்.
5. நீங்கள் பல்துறையும் அறிந்த இதழாசிரியர் என்ற வகையில் நான் சார்ந்த வேறு ஒரு துறை பற்றிக் கேட்க விரும்புகிறேன். இன்று தமிழ் திரைப்படத் தயாரிப்பில் தமிழ்நாட்டுக்கு அடுத்த படியாக கனடா இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டது. மூன்று திரைப்படங்களுக்குக் கதை வசனம் எழுதியவன் என்ற வகையில் ஆர்வம் காரணமாகக் கேட்கிறேன். இலங்கைத் தமிழ் திரைப்படத்துறை மீண்டும் எழுச்சி பெறுமா?
பதில் : இதற்கான பதிலைக் கூறுவதனால். முப்பது வருடகாலப் போரின் தாக்கத்திலிருந்து முதலில் ஈழத்தமிழ் மக்கள் மீள் எழுச்சி பெறவேண்டும். போரின் பின்னரான பிரச்சினைகள் பல இருக்கின்றன. அகதி நிலை, சிறைவாழ்க்கை, கணவன்மார்களை இழந்த கைம்பெண்கள், தாய் தந்தையரை இழந்த பிள்ளைகள,; பிள்ளைகளை இழந்த தாய் தந்தையர,; ஊனமுற்ற போராளிகளின் வாழ்க்கைப் போராட்டம், போராளிப் பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சொந்த நிலங்களை இழந்து பிறிதோர் இடத்தில் வாழ நேரிடும் அவலம், இராணுவப் பிரசன்னம், போரின் பின்னர் சமூகத்தில் ஏற்படும் சமூகச் சீரழிவு, பண்பாட்டுச் சீரழிவு போன்றவை ஈழத்தமிழ்ச்; சமுதாயத்தைப் பெரிதும் பாதித்துள்ளன. இவற்றில் இருந்து மீள பலகாலம் எடுக்கலாம். இன்னுமொன்று திரைப்படத் தயாரிப்பில் ஆர்வமுள்ள இலங்கைத் தமிழர்கள் பலர் இன்று புலம்பெயர்ந்துவிட்டார்கள்.
உள்நாட்டில் பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் தமிழ்த் திரைப்படத் துறை சார்ந்தவர்களால் உடனடியாக மீளெழுச்சி பெறுவது சாத்தியமில்லை. ஆனால் இவர்களுக்கு போருக்குள் வாழ்ந்த வாழ்க்கை அனுபவங்கள் நிறையவே இருக்கின்றன. காலப்போக்கில் இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை மீண்டும் எழுச்சிபெறும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.
6. வேற்றுமை பாராது எழுத்தாளர்களின் திறமைகளை தங்கள் இதழ் மூலம் இலக்கிய ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்கிறீர்கள். எனது படத்தைக் கூட ஞானம் 206 ஆவது இதழில் அட்டைப்படமாக வெளியிட்டு கௌரவித்துள்ளீர்கள். ஏன் எழுத்தாளர்களை அறிமுகம் செய்வதில் சில இதழ்கள் தயக்கம் காட்டுகின்றன?
பதில்: ஞானம் சஞ்சிகை இதுவரை 215 இதழ்களை வெளிக்கொணர்ந்துள்ளது. 15 புலம்பெயர் எழுத்தாளர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை அட்டைப்பட அதிதிகளாகக் கௌரவித்துள்ளது.
பொதுவாக எழுத்தாளர்கள் மத்தியில் கருத்தியல் ரீதியான முரண்பாடுகள் உண்டு. அதேபோன்று இதழ்களை வெளியிடுபவர்கள் மத்தியிலும் கருத்தியல் ரீதியான வேறுபாடுகள் உண்டு. சில இதழியலாளர்கள் குழுமனப்பான்மையுடன் இயங்குவர். இவர்கள் தமது குழுவைச் சேர்ந்தவர்களை முன்னிலைப்படுத்துவர். மற்றவர்களை உதாசீனம் செய்வர். இதன் காரணமாகவே சில இதழ்கள் சில எழுத்தாளர்களை தமது இதழ்களில் அறிமுகம் செய்வதில் தயக்கம் காட்டுகின்றன.
ஞானம் சஞ்சிகைக்கும் அதற்கான கருத்தியல் உண்டு. ஆனால் இலக்கியம் என்று வரும்போது நாம் சகல கருத்தியல் முரண்பாடு கொண்டவர்களையும் அரவணைத்துச் செல்கின்றோம். வேற்றுமையில் ஒற்றுமை காணவிழைகின்றோம். ஈழத்து இலக்கியம், ஈழத்து எழுத்தாளர்கள் என்ற பிரக்ஞையுடன் இயங்குகிறோம். பல்வேறு கருத்துநிலை கொண்டவர்களையும் தத்தம் கருத்துநிலை நின்று தமது கருத்துக்களைக் கூற ஞானம் சஞ்சிகையில் இடமளிக்கின்றோம்.
7. போர்க்கால இலக்கியத்தை வெளிக்கொண்டு வருவதற்காகச் சிறப்பு மலர் ஒன்று வெளியிட்டிருந்தீர்கள். துணிவான அந்தக் கடின முயற்சிக்காகப் பாராட்டுகிறேன். ஆனாலும் தமிழர்களின் அவலங்களை வெளியுலகுக்கு எடுத்துச் சென்ற பலரின் பெயர்கள் அதில் விடுபட்டுப்போனதற்கான காரணம் என்னவாக இருக்கும்?
பதில் : இந்தக் கேள்வியில் ஒரு குழப்பம் இருக்கிறது என்று நினைக்கிறேன். நாங்கள் போர்க்கால இலக்கியத்தை வெளிக்கொண்டு வருவதற்காகச் சிறப்புமலர் வெளியிடவில்லை. ஷஷஈழத்துப் போர் இலக்கியம்|| என்ற சிறப்பு மலரையே வெளியிட்டோம் ஷஷபோர் இலக்கியம்|| என்பதற்கும் ஷஷபோர்க்கால இலக்கியம்|| என்பதற்கும் பொருள்நிலையில் தெளிவான வேறுபாடுகள் உள்ளன. போர் இலக்கியம் என்ற தொடரிலே போர் சார்ந்த அதாவது போரை மையப்படுத்திய அல்லது அப்போருடன் ஏதோ ஒரு வகையிலாவது தொடர்புடைய இலக்கியம் என்று பொருள்படும்.
ஆனால் போர்க்கால இலக்கியம் என்று குறிப்பிடுமிடத்து மேற்படி வரையறை நெகிழ்ந்து அக்கால கட்டம் சார்ந்தவையான போருடன் தொடர்பில்லாத இலக்கியங்களையும் கூட உள்ளடக்கும். போர்க்காலம் என்பதில் போர் என்ற அடைமொழியானது குறித்த ஒரு காலகட்டப் பின்புலத்தை உணர்த்தும் அடையாளக்குறி மட்டுமே. போர் இலக்கியம் என்பதிலே போர் என்பது உள்ளடக்க அம்சத்துடன் ஏதோ ஒரு வகையிலாவது இயைந்ததொன்றாகி விடுகிறது.
ஈழத்திலே போர் நடந்த காலப்பகுதியில் போருடன் தொடர்பற்ற நிலையில் பல இலக்கிய ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. அவ்வகை வெளிப்பாடுகளையெல்லாம் தவிர்த்து போரோடு தொடர்புடையனவாக அமைந்த இலக்கிய ஆக்கங்கள், ஆய்வுகள், நேர்காணல்கள் முதலானவற்றையே ஞானம் வெளியிட்ட ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ் உள்ளடக்கியுள்ளது.
தமிழிலே போர் தொடர்பான இலக்கிய ஆக்கங்கள் பண்டைக்காலத்தில் எழுந்துள்ளன. ஆயினும் அவற்றைப்; “போர் இலக்கியம்|| எனப் பெயர் சுட்டி வகைப்படுத்தும் இலக்கண முறைமை இருக்கவில்லை. ஞானம் சஞ்சிகைதான் “போர் இலக்கியம்|| என்ற இலக்கிய வகைமையை தமிழுலகிற்கு அறிமுகப்படுத்தும் வகையில் 600 பக்கங்களில் ஒரு சிறப்பிதழை முதன்முதலில் வெளியிட்டது.
ஷபோர் இலக்கியம்| என்ற வகைப்பாடு முதலாம் உலக மகாயுத்தத்தின் பின்னரும் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னரும் தோன்றிய இலக்கியங்களைக் குறித்தன. இவை ஆங்கிலத்தில் றுயுசு டுஐவுநுசுயுவுருசுநு என்றே குறிப்பிடப்பட்டன. முதலாம் உலக மகாயுத்தத்தில் பங்குபற்றிய ஏனஸ்ற் ஹெமிங்வே என்ற போர்வீரன் தனது அனுபவங்களை ஷஷபோரே நீ போ|| (குயுசுநுறுநுடுடு வுழு யுசுஆளு) என்ற நாவலாக எழுதினார். நோமன் மெயிலர் என்பவர் யுடுடு ஞருஐநுவு ழுN வுர்நு றுநுளுவுநுசுN குசுழுNவு என்ற நாவலை எழுதினார்.
ஈழத்தமிழர்கள் தான் சமீபகாலத்தில் போரைச் சந்தித்தவர்கள். இவர்கள் பல போர் இலக்கியங்களைப் படைத்துள்ளனர். போர் இலக்கியத் தொகுப்பை நாம் தயாரித்த போது, நூறு வருடங்களின் பின்னரும் இத்தொகுப்பு யுத்தத்தின் சாட்சியாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, போரின்போது நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை வெளிக்கொணர்ந்த படைப்புகளையே முக்கியப்படுத்தினோம். அதாவது போரின்போது நடந்த உண்மை நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் படைப்புகள், போராளிகளின் அனுபவங்களைக் கொண்ட படைப்புகள், இயக்கங்களின் செயற்பாடுகளை விமர்சிக்கும் படைப்புகள், அகதி முகாம் வாழ்க்கை, சிறைச்சாலைப் படுகொலைகள், பதுங்குகுழிவாழ்க்கை, குண்டுமழையில் மக்கள் அழிவு, முஸ்லிம்கள் வடபுலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமை, முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டமை. பெண்கள் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டமை, நூலகம் எரிக்கப்பட்டமை, போரினால் உறவுகளைப் பிரிந்து உளநலன் பாதிக்கப்பட்ட நிலைமை. இயக்கப் போராளியான தமது சொந்தப் புதல்வன் இறந்த போது பயம் காரணமாக தமது புதல்வன் என்று சொல்லமுடியாத நிலைமை, பொது வைத்தியசாலையில் இறந்த உடல் கிடந்தாலும் பயம் காரணமாக உறவினர் பொறுப்பேற்காத நிலை, புலம்பெயர்ந்ததால் உறவுகள் சிதைந்த நிலை, தற்கொலைப் போராளி உடல் சிதறிச் சாகும்போது சகபோராளி ஊமைத்துயரத்துடன் அழுகின்ற நிலைமை, இனக்கலவரம் தொடர்பானவை, இராணுவ அடக்கு முறைகள், நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்ட இளைஞர் யுவதிகளின் உடல்கள், உயர்பாதுகாப்பு வலையங்கள,; புதல்வர்கள் போருக்குப் போவதால் ஏற்படும் குடும்பச் சிதைவு, கடலில் ஏற்பட்ட மரணங்கள், இந்தியப் படையினரின் அட்டூழியங்கள், முஸ்லிம்களின் அகதி வாழ்க்கை, அரசியல் படுகொலைகள், போரை எதிர்த்தவர்களின் கருத்துக்கள், அகால மரணங்கள், சந்தேகக் கைதுகள், பிணங்கள் மலிந்த பூமி, தலைகளற்ற கற்பக தருக்கள,; முகடுகள் அற்ற வீடுகள், முகங்களும் முகவரிகளும் இல்லாத மக்கள், இடப்பெயர்வு, போராளிகளின் முகாம், இராணுவத்தினரின் முகாம், சிங்கள இராணுவத்தினரின் அனுபவங்கள், போராளிகளின் அனுபவங்கள் வித்துடல்களின் புதைகுழிகள் அழிக்கப்பட்டமை, முள்ளிவாய்க்கால் படுகொலை எனப் பெரும் பாடுபொருள் வெளியை இத்தொகுப்பு அடக்கியுள்ளது. மேற்குறிப்பிட்ட கருப்பொருள்களை வகை மாதிரியாகக் கொண்ட படைப்புகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது.
ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழை வெளியிடுவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னரே அதற்கான அறிவித்தலை ஞானம் 145 ஆவது இதழில் இருந்து ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக வெளியிட்டோம். எமக்குக் கிடைத்த படைப்புகளிலிருந்து மேற்குறிப்பிட்ட போர் இலக்கியச் சிறப்பிதழுக்கு பொருத்தமான கருப்பொருட்களைக் கொண்ட படைப்புகளைத் தெரிவு செய்து சிறப்பிதழில் சேர்த்தோம்.
நீங்கள் குறிப்பிட்டது போன்று யாருடைய பெயராவது அல்லது படைப்பாவது விடுபட்டுப் போயிருந்தால் அது எமது தவறு அல்ல. குறிப்பிட்ட எழுத்தாளர் தனது போர் இலக்கியப் படைப்பை எமக்கு அனுப்பி ஒத்துழைப்பு வழங்கவில்லை. அல்லது அவரது படைப்பு போர் இலக்கியப் படைப்பின் வகைமைக்குள் அடங்கவில்லை என்பதே காரணமாகும்.
8. ஞானம் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழ் ஒன்றினை வெளியிட்டது. அதன் நோக்கம் மற்றும் உள்ளடக்கம் பற்றிக் கூறுங்கள்.
பதில்: ஞானம் 175 ஆவது இதழை ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழாக வெளிக்கொணர்ந்தோம். புலம்பெயர் இலக்கியம் என்பது போர் இடம்பெற்ற வேளையில் உள்நாட்டில் இருப்பது தமது உயிர்ப் பாதுகாப்பிற்கு ஏற்றதல்ல என்று அஞ்சி தமது நாட்டினைப் பிரிந்து சென்ற ஏக்கத்தினையும் சென்றடைந்த நாடுகளில் தமக்கு ஏற்பட்ட அல்லல் நிறைந்த அனுபவங்களையும் பதிவு செய்யும் இலக்கியங்கள் என வகைப்படுத்தப்பட்டன.
இருவேறுபட்ட நிலைகளில் இந்தப் படைப்புகளைக் காணலாம். ஒன்று தாயக நினைவுகளின் ஏக்கப் பதிவுகள் மற்றது புலம்பெயர்ந்து வாழும் நாட்டில் தாம்பெற்ற அனுபவங்கள். ஆரம்பத்தில் இவர்களது படைப்புகளில் துன்ப துயரங்களே அதிகமாகக் காணப்பட்டன.
ஆனால், காலப்போக்கில் இந்தப் புலம்பெயர்ந்தோர் தாம் சென்றடைந்த நாடுகளில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டார்கள். இவர்கள் அனுபவ விசாலம் பெற்றார்கள். அறிவு விருத்தி பெற்றார்கள், தொழில்நுட்பத் தேர்ச்சி பெற்றார்கள், மூலதன ஈட்டம் பெற்றார்கள். பொருளாதாரவிருத்தி பெற்றார்கள். கலாசாரப் புரிந்துணர்வு பெற்றார்கள். இவர்கள் படைக்கும் இலக்கியங்கள் புதுவகை இலக்கியங்களாக மிளிரத் தொடங்கின. பனிபடர்ந்த நாடுகளின் புதிய சூழலில் புதிய பல்தேசியக் கலாசாரத்தின் மத்தியில் வாழ்ந்து தமது வாழ்வு அனுபவங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்தார்கள். மேலைத்தேய சமூக சிந்தனைக;டாக வாழ்க்கையை நோக்கும் நிலை தமிழர் வாழ்விலும் புகுந்து கொண்டது. பெண்ணியம்சார் சிந்தனைகளை தமிழில் பரவலாக்கம் செய்தார்கள். புலம்பெயர் இலக்கியம் என்னும் இலக்கியத் தொகுதியை இவர்கள் தமிழுக்குத் தந்தார்கள். இவர்களால் தமிழ் இலக்கியம் சிறப்புப் பெற்றது. அதன் வழி உலகத் தமிழ் இலக்கியம் சிறப்புப் பெற்றது.
ஞானம் தொகுத்த புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழ் 900 பக்கங்களைக் கொண்டது. இச்சிறப்பிதழ் புலம்பெயர் இலக்கியம் பற்றிய முழுமையான படைப்புலகப் பரிமாணத்தை வழங்கும். புலம்பெயர் சந்ததியினர் எதிர்காலத்தில் வேற்றுமொழிச் சூழலில் வாழ நேரிடினும் தமது மூதாதையரின் இலக்கிய வேர்களைத் தேடும்போது அம்மூதாதையர்களின் இலக்கியச் சாட்சியமாக இத்தொகுதி காட்சியளிக்கும்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் தஞ்சங்கோரி பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற சாதாரண சூத்திரத்திற்கு அப்பால், தொழில் செய்து பணம் சேர்த்தார்கள் என்ற வாய்ப்பாட்டுக்கு அப்பால், தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் தமிழலக்கியத்திற்கும் எத்தகைய பணி செய்தார்கள் என்பதை இத்தொகுதி பறைசாற்றி நிற்கும். இணையத்தில் தமிழும் இலக்கியமும் உலாவர புகலிடத் தமிழர்கள் ஆற்றிய பங்களிப்பை இத்தொகுதி கூறி நிற்கும். நவீன, தமிழ் அரசியல் சமூக பண்பாட்டு முகத்தை உலக வெளியில் தெரிவிக்கும் முதலாவது பெருஞ் சிறப்பிதழாக இச்சிறப்பிதழ் விளங்கும். எல்லாவற்றிற்கும் மேலாக புலம்பெயர் இலக்கியம் என்ற தழிழ் இலக்கிய வகைமையினை ஈழத்தமிழர் உருவாக்கினார்கள் என்பதையும் உலகத் தமிழ் இலக்கிய வரலாற்றுக்கு ஈழத்தமிர் ஒளி பாய்ச்சினர் என்பதையும் இந்த இதழ் வலுவாகக் காட்டிநிற்கும்.
9. ஞானம் சஞ்சிகையின் 200 ஆவது இதழ் நேர்காணல் சிறப்பிதழாக வெளிவந்ததாக அறிகிறோம். அதன் முக்கியத்துவம் யாது?
பதில்: இலக்கியம் சார் கருத்தியல் மற்றும் அழகியல் தொடர்பான சிந்தனைகளின் உரையாடல் தளத்தை இலக்கிய வெளி (டுவைநசயசல ளுpயஉந) எனக் குறிப்பிடுவர். ஞானம் நேர்காணல்கள் என்னும் இப்பெருந்தொகுதி ஈழத்துத் தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்தியல் மற்றும் அழகியல்சார் இலக்கிய வெளியை வலுவும் வளமும் பெறச் செய்வதோடு தொடர்ச்சியான உரையாடல் முன்னெடுப்புக்குமான பல வெளிகளைத் திறந்திருக்கிறது. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் காத்திரமான சிந்தனைப் போக்குகள் தம்முள்தாம் முடங்கிவிடாமல் அகன்ற ஓர் இலக்கிய வெளியில் விவாதிக்கப்பட்டு பகிரப்படல் வேண்டும் என்ற வரலாற்றுத் தேவையை இத்தொகுதி உணர்த்தி நிற்கிறது. எனவே தான் பொருத்தப்பாடு கருதி இந்த நேர்காணல் தொகுதிக்கு “ஈழத்து நவீன இலக்கிய வெளி|| எனப் பெயரிட்டுள்ளோம்.
1000 பக்கங்கள் கொண்ட இத்தொகுப்பில் 60 நேர்காணல்கள் அடங்கியுள்ளன. ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியுடன் தொடர்புடைய ஆளுமைகளாக விளங்கும் கதாசிரியர்கள் கவிஞர்கள், இதழாசிரியர்கள், விமர்சகர்கள், பத்தி எழுத்தாளர்கள், பேராசிரியர்கள,; புலம்பெயர்ந்த படைப்பாளிகள், பெண்ணியவாதிகள், பத்திராதிபர்கள், ஒலிஒளி ஊடக வியலாளர்கள், நாடகக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், ஆய்வறிஞர்கள், கல்வியாளர்கள், இலக்கிய இயக்கச் செயற்பாட்டாளர்கள் என இலக்கியத்தின் பலதளங்களில் இயங்கிய பலரையும் அவர்களின் துறைசார் வாண்மைகளையும், ஈழத்துக் கலை இலக்கிய மேம்பாட்டிற்கான அவர்களின் பங்களிப்புகளையும் இந்த நேர்காணல்களில் விரிவாக அவதானிக்க முடியும். இவற்றுள் பேராசிரியர் சிவத்தம்பி, எஸ்.பொ, செங்கை ஆழியான், தெளிவத்தை ஜோசப் ஆகியோரின் நேர்காணல்கள் நீண்ட தொடர் நேர்காணல்களாகும்.
இந்த நேர்காணல் தொகுப்பில் இடம்பெற்ற அத்தனை நேர்காணல்களுமே மிக முக்கியமானவை. இவை ஈழத்து நவீன இலக்கிய வரலாற்றில் இடம் பிடித்தோரின் வாக்கு மூலங்கள். இலக்கிய உலகில் தாம் கண்டறிந்த உண்மையின் தரிசனத்தை காய்தல் உவத்தலின்றித் தமது வாக்குமூலங்களாக இவர்கள் பதிவு செய்துள்ளனர். இவை அவர்களின் நேரடியான சாட்சியங்கள். வேறொருவர் கூறுவதைவிட சம்பந்தமுடையோர் கூறுவது வலிமையுடையது. அந்த வகையில் எழுத்தாளன் அகவயப்பட்டு அவனே கூறும் அதிகாரபூர்வமான அகச்சான்றுகள் இவை. இன்னுமொன்று சில ஆய்வறிஞர்களதும் படைப்பாளிகளதும் தன்வரலாறு எழுதப்படாத சூழலில் அவர்கள் இவ்வுலகை நீத்த இன்றைய நிலையில் அவர்களின் தன்வரலாற்றுப் பதிவுகள் இந்த நேர்காணல்களில் அடங்கியிருப்பதென்பது பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில் இந்த நேர்காணல்கள் வாழ்ந்து மறைந்த எழுத்தாளர் சிலரின் தன்சரிதமாகவும் அமைகின்றன.
10. தங்களது ஏனைய இலக்கியச் செயற்பாடுகள் பற்றிக் கூறுங்கள்.
பதில்: ஞானம் இலக்கியப் பண்ணை என்ற அமைப்பினை உருவாக்கி அவ்வமைப்பின் ஊடாக ஈழத்தின் இலக்கிய வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய சான்றோர்களுக்கும் ‘சாகித்திய ரத்னா’, ‘தேசத்தின் கண்’ போன்ற அரச கௌரவம் பெற்ற இலக்கிய கர்த்தாக்களுக்கும் விழாக்கள் எடுத்து கௌரவம் செய்கிறோம். எழுத்தாளர்களுக்கு மணிவிழாக்கள், பவளவிழாக்கள் நடத்தி கௌரவம் செய்கிறோம். ஈழத்து இலக்கியத்துக்கு பெருமை சேர்த்த படைப்பாளிகள் அமரத்துவம் எய்தும்போது அவர்களுக்கு அஞ்சலிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்து அனுதாபம் செலுத்துகிறோம்.
11. தாங்கள் பதிப்பு முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறீர்கள் அதுபற்றிக் கூறுங்கள்.
பதில்: ‘ஞானம் பதிப்பகம்’ என்ற வெளியீட்டகத்தை 1999 இல் ஆரம்பித்து பலதரப்பட்ட இலக்கிய நூல்களை வெளியிட்டு வருகிறோம். மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கூத்து, நேர்காணல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, ஆய்வு, போர் இலக்கியம், சமயம், அரசியல், பயண இலக்கியம், பண்பாடு, தொகுப்பு நூல்கள், ஈழமும் தமிழும் தொடர்பான ஆய்வுகள் என 50 நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளோம். இந்நூல்களில் சில தேசிய அரச சாகித்திய விருது, மாகாண சாகித்திய விருது உட்பட பல்வேறு இலக்கிய நிறுவனங்களின் விருதுகளைப் பெற்றுள்ளன.
12. தங்களின் இலக்கிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு எத்தகையதாக உள்ளது?
பதில்: எனது மனைவி ஞானம் ஞானசேகரன் சமய நூல்கள் எழுதுபவர். இந்துமதம் என்ன சொல்கிறது? என்னும் தலைப்பில் இதுவரை 5 தொடர் நூல்களை வெளியிட்டுள்ளார்.
மகன் ஞானம் பாலச்சந்திரன் இதுவரை 8 நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் ‘ஈழமும் தமிழும்’ வரிசையில் 5 ஆய்வு நூல்கள் அடங்கும். அத்தோடு பயண இலக்கிய நூல், நாவல,; கட்டுரை நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்.
மனைவி ஞானம் சஞ்சிகையின் இணை ஆசிரியர். மகன் ஞானம் சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியர். எனவே சஞ்சிகை வெளியீடு என்பது எமது குடும்பத்தில் சகலரதும் ஒத்துழைப்புடன் இடம்பெறுகிறது. நாங்கள் வெளிநாடுகளில் இருக்கும் போது மகன் ஞானம் பாலச்சந்திரன் சஞ்சிகையை வெளிக்கொணர்வார். தங்குதடையின்றி உரிய காலத்தில் ஞானம் வெளிவருவதற்கு குடும்பத்தினரின் கூட்டு முயற்சியே காரணம்.

நன்றி. உங்கள் நேரத்தை ஒதுக்கி உதயன் வாசகர்களுக்காக இலக்கியம் சார்ந்த சிறப்பான விளக்கங்களைத் தந்திருக்கிறீர்கள். உங்கள் குடும்பமே இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பதையிட்டுப் பெருமையாக இருக்கின்றது. இந்த மண்ணில் தமிழும், இலக்கியமும் நிலைத்து நிற்பதற்கான இலக்கியப் பாலம் அமைக்கத் தங்கள் ஞானம் இதழ் பெரிதும் உதவியாகத் தொடர்ந்தும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகின்றேன். இச்சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த உதயன் ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.