ஜெ. மரணம் முதல் தினகரன் எதிர்ப்பு வரை: அதிமுக அதிர்வலைகள்

ஜெயலலிதா மரணம் முதல் தினகரன் மீதான எதிர்ப்பு வரை தமிழக அரசியலில் அரங்கேறி வரும் சம்பவங்களின் தொகுப்பு.

ஜெயலலிதா மரணம்
அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளராகவும், தொடர்ந்து இரண்டாவது முறை தமிழக முதல்வருமாகவும் இருந்த ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் டிசம்பர் 5, 2016-ல் மரணமடைந்தார். இது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஓபிஎஸ் முதல்வராகப் பொறுப்பேற்றார்
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார். ஜெ. மறைந்த உடனேயே முதல்வரும், அனைத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்களும், எந்த சோகமும் இல்லாமல் இயல்பாகப் பதவியேற்றது பலரின் புருவத்தை உயர்த்தியது.
அப்போலோ மருத்துவமனைக்கே அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் வரவழைக்கப்பட்டு, ஓபிஎஸ் முதல்வராக உறுதிமொழிக் கடிதம் வாங்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமனம்
கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா நடராஜன், அஇஅதிமுகவின் பொதுச் செயலாளராக டிசம்பர் 29-ம் தேதி அன்று நியமிக்கப்பட்டார்.
ஓபிஎஸ் சசிகலா இடையே முதல்வர் பதவிக்கான மோதல்
வார்தா புயல், வெள்ள நிவாரணம் வழங்கல் உள்ளிட்ட தருணங்களில் என்று புதிய முதல்வர் ஓபிஎஸ்-ன் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தன. இந்நிலையில் கட்சியும் ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. ஓபிஎஸ் தனது முதல்வர் பதவியை பிப்ரவரி 5-ம் தேதி ராஜினாமா செய்தார். தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவும் அவரின் ராஜினாமாவை ஏற்றார்.
அம்மா சமாதியில் ஓபிஎஸ் அமைதி தியானம்
இந்நிலையில் சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க அனைத்து ஏற்பாடுகளும் துரித கதியில் நடந்தன. திடீர் திருப்பமாக, ஓபிஎஸ் ஜெயலலிதாவின் சமாதியில் 40 நிமிட தியானத்தில் அமர்ந்தார். அங்கேயே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் குரல்கள் எழுந்தன. சசிகலா எதிர்ப்பலை விரிந்தது.
சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, திவாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, 19 வருடங்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. பிப்ரவரி 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்துத் தீர்ப்பளித்தது. அத்துடன் தமிழக முதல்வர் ஆகவேண்டும் என்ற சசிகலாவின் கனவும் தகர்ந்தது.
புதிய சட்டப்பேரவைத் தலைவராக எடப்பாடி பழனிசாமி
சசிகலா சிறைக்குச் சென்றபிறகு, அதிமுகவின் புதிய சட்டப்பேரவைத் தலைவராக மூத்த அமைச்சர்களில் ஒருவரான எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக சசிகலா அறிவித்தார்.
அதிமுக துணைப் பொதுச் செயலாளரானார் தினகரன்
ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்த சசிகலாவின் அண்ணன் மகன் தினகரனின் மன்னிப்புக் கடிதம் பிப்ரவரி 15-ம் தேதி அன்று சசிகலாவால் ஏற்கப்பட்டது. அன்றே அவர் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆகவும் நியமிக்கப்பட்டார்.
கூவத்தூர் கூத்துகள்
ஆட்சியைக் காப்பாற்ற அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் காஞ்சிபுரம், கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். கோடிக்கணக்கில் அவர்களுக்குப் பணம் பரிமாறப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பின.
மனம் மாறிய எம்எல்ஏ ஒருவர் விடுதியில் இருந்து தப்பி வந்து, ஓபிஎஸ் வீட்டில் வந்தடைந்தார். கூவத்தூர் சென்ற சசிகலா, எம்எல்ஏக்கள் அனைவருடனும் உணர்வுபூர்வமாகப் பேசினார்.
சிறைக்குச் சென்ற சசிகலா
சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அடுத்த நாள், சசிகலா பலத்த பாதுகாப்புடன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்றார். அப்போது அவரின் உடைகளைச் சுமந்து வந்த காரில் கற்களை வீசியதாகச் சிலர் கைது செய்யப்பட்டனர்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்பு
ஆளுநர் தனது நீண்ட மவுனத்துக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அளித்த அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து ஈபிஎஸ் பிப்ரவரி 16 அன்று, 31 அமைச்சர்களுடன் முதல்வரானார். ஓபிஎஸ் வகித்து வந்த துறைகள் ஈபிஎஸ் வசம் அளிக்கப்பட்டன. அடுத்த இரண்டு நாட்களில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற ஈபிஎஸ்
தமிழக சட்டப்பேரவையில் பிப்ரவரி 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டை கிழிந்தது. பலத்த அமளிதுமளிகளுக்குப் பிறகு 122 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஈபிஎஸ் நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு
சசிகலா, ஓபிஎஸ் என அதிமுக இரு அணிகளாகப் பிரிந்த நிலையில், ஜெயலலிதாவின் தொகுதியான சென்னை ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இரண்டு அணிகளும் கட்சியின் சின்னமான ‘இரட்டை இலை’ தங்களுக்குத்தான் என்று தேர்தல் ஆணையத்திடம் உரிமை கோரின.
இரட்டை இலை சின்னம் முடக்கம்
கட்சியின் பெரும்பாலான எம் எல் ஏக்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு தனக்கே இருப்பதாக சசிகலா தரப்பு வாதிட்டது. கட்சியின் அடிப்படை விதிகளின்படி சசிகலா பொதுச் செயலாளராகப் பதவியேற்றதே செல்லாது; அவர் இரட்டை இலை சின்னத்தை உரிமை கோர முடியாது என்று ஓபிஎஸ் தரப்பு கூறியது. தேர்தலுக்குக் குறுகிய அவகாசமே இருந்ததால், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தையே முடக்கியது. கட்சியின் பெயரைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது.
பரபரப்பான ஆர்.கே. நகர் தேர்தல் களம்
ஆர்.கே.நகர் (அம்மா) கட்சியின் வேட்பாளராக டிடிவி தினகரனும், ஓபிஎஸ் தரப்பில் ஆர்.கே.நகர் (புரட்சித் தலைவி அம்மா) கட்சியின் வேட்பாளராக மதுசூதனனும் அறிவிக்கப்பட்டனர். திமுக சார்பில் மருது கணேஷும், பாஜக சார்பில் கங்கை அமரனும் போட்டியிட்டனர்.
ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து
ரூ.100 கோடிக்கும் மேல் பணப் பரிமாற்றம்; ஓட்டுக்கு ரூ.4000 என்று தகவல் வெளியானது. சுகாதாராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கிடைத்த ஆவணங்கள் அவற்றை உறுதி செய்தன. அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம், இடைத் தேர்தலையே ரத்து செய்தது.
சசிகலா, ஓபிஎஸ் அணிகள் இணைப்பு?
ஓபிஎஸ் தரப்பில் கட்சியை ஒருங்கிணைக்கும் வகையில், நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைக்குத் தயார் என்று கூறியதாக செய்திகள் வெளியாகின. அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை அதிமுக ஒற்றுமையுடன் செயல்படும் என்று அறிவித்தார்.
பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இதனால் இரு அணிகளும் விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஓபிஎஸ் மறுப்பு
இந்நிலையில் ஏப்ரல் 18-ம் தேதி, ஓ.பன்னீர்செல்வம், ‘‘சசிகலா குடும்பத்தினர் கட்சியில் இருக்கும் வரை இரு அணிகள் இணைப்பு குறித்து பேச முடியாது’’ என திட்ட வட்டமாக தெரிவித்தார். இதனால், இணைப்பு முயற்சியில் சிக்கல் ஏற்பட்டது.
தினகரனுக்கு எதிராக மூத்த அமைச்சர்கள் போர்க்கொடி
அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமைச்சர்கள் ஏப்ரல் 18-ம் தேதி அவசர ஆலோசனை நடத்தினர். இன்னொரு பக்கம் டிடிவி தினகரனும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
திடீர் திருப்பமாக தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு கட்சி, ஆட்சியை காப்பாற்றுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.
தினகரன் பரபரப்பு பேட்டி
தினகரன் மீதான எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கட்சிக்கும் ஆட்சிக்கும் உகந்த முடிவை எடுப்பேன். என்னை ஒதுங்கச் சொன்னார்கள் ஒதுங்கி விட்டேன் ” என்று தெரிவித்துள்ளார்.