ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடத்த வலியுறுத்தி சென்னையில் ஓபிஎஸ் அணி மார்ச் 8-ல் உண்ணாவிரதம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் உண்ணா விரத போராட்டம் நடத்தப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 5-ம் தேதி முதல் வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். 7-ம் தேதி ஜெயலலிதா சமாதியில், தியானம் மேற்கொண்ட அவர், சசிகலா தரப்பினர் கட்டாயப்படுத்தியதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக அறிவித்தார். அதன் பிறகு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என அறிவித்தார். தொடர்ந்து, அதிமுகவில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் தொடர் பாக விசாரணை நடத்தக் கோரி, நேற்று குடியரசுத் தலைவரிடம் ஓபிஎஸ் தரப்பு எம்பிக்கள் மனு அளித்தனர்.

இந்நிலையில் நேற்று, ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில், அவரது தலைமையில், மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்ட முடிவில், மார்ச் 8-ம் தேதி ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை அல்லது சிபிஐ விசாரணை கோரி, உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி, இ.மதுசூதனன் தலைமை யில் நிர்வாகிகள் நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.