ஜெயலலிதா மரணத்தில் மர்ம முடிச்சு அவிழும் வரை தர்மயுத்தம் தொடரும் ஓ.பன்னீர்செல்வம்

நெல்லை மாவட்ட அ.தி. மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில், அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, கழக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டை கோர்ட்டு எதிரே உள்ள மைதானத்தில் நடந்தது.

கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கிய போது உடனிருந்த தலைவர்கள், தொண்டர் கள் இன்று நம்பக்கம் இருக்கின்றனர். இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்கு இங்கு கூடி உள்ளனர்.

2011-ம் ஆண்டு சசிகலா உள்பட அவரது குடும்பத்தினர் 16 பேரை ஜெயலலிதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கிவிட்டார். 3 மாதம் கழித்து சசிகலா திரும்பி வந்த போது, ஜெயலலிதா உதவியாளராக மட்டுமே சேர்த்துக் கொண்டார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள், ஜெயலலிதா மரணம் வரை கட்சியில் சேர்க்கப்படவில்லை. ஆனால் அவர்கள் தற்போது பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் ஆகிக் கொண்டனர். அத்தகைய துர்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது.

அத்தகைய கும்பலிடம் இருந்து கட்சியை காப்பாற்றவே இந்த தர்ம யுத்தம் நடக்கிறது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சு அவிழும் வரை இந்த தர்மயுத்தம் தொடரும் என்று நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.