ஜெயலலிதா அரசின் இரும்பு கோட்டையில் குடும்ப ஆட்சிக்கு இடம் இல்லை

சென்னையை அடுத்த வண்டலூரில் தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ப.தனபால் ஆகியோர் தலைமை தாங்கினர். துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பென்ஜமின், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:–

கொடுப்பது என்பது எம்.ஜி.ஆரின் பிறவிக்குணம். அந்த வள்ளலின் வாரிசு தான் ஜெயலலிதா. இந்தியா, சீனா யுத்தம் நடந்து கொண்டிருந்த நேரம். யுத்த நிதி திரட்டுவதற்காக சென்னையில் ஒரு கலை நிகழ்ச்சி நடந்தது. அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டார். ஜெயலலிதாவும் கலந்து கொண்டார். அந்த நேரத்தில் ஜெயலலிதா திரையுலகில் அடி எடுத்து வைத்த நேரம். லால் பகதூர் சாஸ்திரியிடம் பலரும் நிதி கொடுத்தார்கள். எல்லோரும் ஆச்சரியப்படும் அளவுக்கு தான் அணிந்திருந்த தங்க நகைகளை எல்லாம் கழற்றி யுத்த நிதிக்காக கொடுத்தார் ஜெயலலிதா. நாட்டுக்காக அப்போதே அள்ளிக்கொடுத்தவர் ஜெயலலிதா.

தீய சக்திகளை அழிப்பதற்காகவும், ஏழை, எளிய மக்களை காப்பதற்காகவும் அண்ணாவின் பெயரால் இயக்கம் தொடங்கியவர் தான் எம்.ஜி.ஆர். இரக்கப்படுவதற்கும் ஒரு இதயம் வேண்டும், அள்ளிக் கொடுப்பதற்கும் ஒரு உள்ளம் வேண்டும். அந்த இதயத்தையும், உள்ளத்தையும் பிறக்கும் போதே ஆண்டவனிடம் வரமாக பெற்று வந்தவர் எம்.ஜி.ஆர். அவருக்கு பிறகு அள்ளி அள்ளி கொடுத்தவர் ஜெயலலிதா.

இப்போது நடப்பது ஜெயலலிதாவின் ஆட்சி. சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் அரவணைக்கும் ஆட்சி. எந்த நோக்கத்திற்காக எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை ஆரம்பித்தாரோ, எந்த நோக்கத்திற்காக ஜெயலலிதா இந்த இயக்கத்தை கட்டிக்காத்தாரோ அந்த மகத்தான தலைவர்களின் லட்சியங்களை நிறைவேற்றுவதற்காக நடைபெறுகிற ஆட்சி இது. ஜெயலலிதாவின் அரசு ஒரு இரும்பு கோட்டை. இந்த கோட்டையில் குடும்ப ஆட்சிக்கு இடம் இல்லை. அராஜக ஆட்சிக்கு இடம் இல்லை. விசுவாச தொண்டர்களின் ஆட்சி. உண்மையான மக்கள் ஆட்சி.

இலங்கையிலே பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகத்திற்கு ஓடோடி வந்தபோது, அவர்களை அரவணைத்து, அவர்களுக்கு இருக்க இடம் கொடுத்து, உண்ண உணவளித்து, அனைத்து உதவிகளையும் செய்து, தமிழகத்திலுள்ள தமிழர்களோடு தங்க வைத்த மாபெரும் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். தான்.

எம்.ஜி.ஆர். குல்லா, எம்.ஜி.ஆர். கண்ணாடி, எம்.ஜி.ஆர். கெடிகாரம், எம்.ஜி.ஆர். கம்பீரம், எம்.ஜி.ஆர். புன்சிரிப்பு, எம்.ஜி.ஆர். ஓலைக் குடிசைக்கும் ஒரு விளக்கு ஏற்றிவைத்த ஒளிவிளக்கு. சூரிய வெளிச்சத்தால் மட்டுமே இலைகள் தளிர்க்கும் எனும் விஞ்ஞானத் தத்துவத்தையே தகர்த்து, சந்திரனாலும் அது சாத்தியமாகும் என்றே நிரூபித்த ராமச்சந்திரன். ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் என்று, வாயசைத்த பாடல்களுக்கும், வாழும் முறையால் உயிர்கொடுத்து போன உத்தமர். காலத்தை வென்றவர் தான் நம்முடைய எம்.ஜி.ஆர்.  இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.சோமசுந்தரம், மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், வாலாஜாபாத் கணேசன், நந்திவரம்–கூடுவாஞ்சேரி பேரூர் கழக மகளிர் அணி செயலாளர் பி.அம்சவள்ளி, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் கவுஸ்பாஷா, காஞ்சீபுரம் முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.