ஜெயலலிதாவின் கனவு திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி: சென்னை விழாவில் மோடி பேச்சு

ஜெயலலிதாவின் கனவு திட்டமான மகளிருக்கு மானிய ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி என்று பிரதமர் மோடி பேசினார்.

ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டம் மற்றும் 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் ஆகியவற்றை மோடி சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பயனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மோடி சென்னைக்கு வருகை புரிந்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக எம்.பி.க்கள் ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். ஓபிஎஸ் வரவேற்புரை நிகழ்த்த, முதல்வர் பழனிசாமி முன்னிலை வகித்து உரையாற்றினார்.

பிரதமர் மோடி 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

அதற்குப் பிறகு மோடி பேசுகையில், அன்புமிக்க சகோதர சகோதரிகளே வணக்கம் என தமிழில் உரையைத் தொடங்கினார்.

”தமிழக மக்களுக்கு தலைவணங்குகிறேன். ஜெயலலிதாவின் பிறந்த நாளில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதாவின் கனவு திட்டமான மகளிருக்கு மானிய ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி. பாரதியாரின் மண்ணில் நிற்பதற்கு பெருமைப்படுகிறேன்.

மகளிருக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிருக்கான இரு சக்கர வாகனம் அவர்களின் குடும்பத்திற்கு பெரும் பலனளிக்கும். சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் 70% பயனடைவது பெண்களே. பெண்களின் கல்விக்கு உதவி செய்யும் போது அந்தக் குடும்பமே முழுமையாகப் பயன்பெறும்.

சுகாதாரம், விவசாயிகள் நலன் ஆகியவற்றை இலக்காக வைத்து மத்திய அரசு செயல்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று பேசினார்.