- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல்: அதிக வாக்குகள் பெற்ற பாஜக, அதிக இடங்களில் வென்ற ஜே.எம்.எம்
ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலுக்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி முடிவுகளின்படி காங்கிரஸ் கட்சியின் கூட்டணி 47 இடங்களில் வென்றுள்ளது.
அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும், அதிக சதவிகித வாக்குகளைப் பெற்ற கட்சியாக பாரதிய ஜனதா கட்சியும் உள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முடிவுகள் மூலம் தெரியவருகிறது.
மாவோயிஸ்டுகள் பிரச்சனை தீவிரமாக உள்ள இந்திய மாநிலங்களில் ஒன்று என்பதால், இங்கு 81 தொகுதிகளே உள்ளபோதிலும் நவம்பர் 30 தொடங்கி டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெற 41 இடங்கள் தேவை.
கட்சி | தொகுதிகள் | வாக்கு சதவிகிதம் (%) |
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா | 30 | 18.72 |
காங்கிரஸ் | 16 | 13.88 |
ராஷ்ட்ரிய ஜனதா தளம் | 1 | 2.75 |
பாரதிய ஜனதா கட்சி | 25 | 33.7 |
அனைத்து ஜார்கண்ட் மாணவர் யூனியன் | 2 | 8.10 |
தேசியவாத காங்கிரஸ் | 1 | 0.42 |
மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் | 1 | தகவல் இல்லை |
ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா | 3 | 5.45 |
பகுஜன் சமாஜ் கட்சி | – | 1.53 |
ஏ.ஐ.எம்.ஐ.எம் | – | 1.16 |
சுயேச்சை | 2 | தகவல் இல்லை |
நோட்டா | – | 1.36 |
காங்கிரஸ் அங்கம் வகித்த கூட்டணிக்கு தலைமை வகித்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமை 30 இடங்களிலும் காங்கிரஸ் 16 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒரு இடத்திலும் வென்றுள்ளன.
2014 சட்டமன்றத் தேர்தலில் 37 இடங்களில் வென்ற பாரதிய ஜனதா கட்சி இந்த முறை 25 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது.
சென்ற மே மாதம் நடந்த இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இந்த மாநிலத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளில் பாஜக வென்றது குறிப்பிடத்தக்கது.
அனைத்து ஜார்கண்ட் மாணவர் யூனியன் சென்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு ஐந்து தொகுதிகளில் வென்றது. ஆனால் இந்த முறை தனியாகப் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது.
பாஜக, அனைத்து ஜார்கண்ட் மாணவர் யூனியன் ஆகியவற்றின் கூட்டு வாக்கு சதவிகிதம் சுமார் 41.5 % உள்ளது.
இது காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளும் கூட்டாகப் பெற்ற 35.5 சதவிகிதத்தைவிட அதிகம்.
தனித்தனியாகப் போட்டியிடாமல், 2014 சட்டமன்றத் தேர்தலைப் போலவே கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தால் தேர்தல் முடிவுகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமைந்திருக்க வாய்ப்புண்டு.

தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (லிபேரேஷன்) ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியில் வென்றுள்ளன.
பாஜகவில் இருந்து பிரிந்த முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி 2006இல் உருவாக்கிய ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜாதந்ரிக்) கட்சி மூன்று இடங்களில் வென்றுள்ளது.
இந்த முறை இரண்டு சுயேச்சைகளும் வென்றுள்ளனர்.
வாக்கு சதவிகிதம்
காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரை 43 தொகுதிகளில் போட்டியிட்ட ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா பதிவான வாக்குகளில் 18.7% வாக்குகளும், 31 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 13.9% வாக்குகளும், ஏழு தொகுதிகளில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் 2.75 % வாக்குகளும் பெற்றுள்ளன.

ஆட்சியைப் பிடித்துள்ள இந்தக் கூட்டணி ஒட்டுமொத்தமாக 35.5 % வாக்குகளைப் பெற்றுள்ளது.
81 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட பாஜக 33.4% வாக்குகளைப் பெற்றுள்ளது. அதன் முன்னாள் கூட்டணிக் கட்சியான அனைத்து ஜார்கண்ட் மாணவர் யூனியன் 8.1% வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை என்றாலும் மாயாவதி தலையைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 1.53 % வாக்குகளை பெற்றுள்ளது.
அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் 1.16% வாக்குகளை பெற்றுள்ளது. இக்கட்சியும் ஒரு தொகுதியில்கூட வெல்லவில்லை.
நோட்டா அனைத்து தொகுதிகளிலும் சேர்த்து 1.36% வாக்குகளைப் பெற்றுள்ளது. மாநிலம் முழுவதும் 2,05,050 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்துள்ளன.