ஜல்லிக்கட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது: தமிழக முதல்வருக்கு மோடியின் பதில்

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரியும், பீட்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது.

இதனையடுத்து டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்றக்கோரி முதல்வர் வலியுறுத்தியதனார். தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். மேலும், வறட்சி பாதிப்பு குறித்தும் பிரதமருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் பிரதமரின் நிலைப்பாடு தொடர்பாக ட்வீட்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த ட்விட்டர் பக்கத்தில், “ஜல்லிக்கட்டு விளையாட்டின் கலாச்சார முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும், தற்சமயம் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஜல்லிக்கட்டு தொடர்பாக மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அரசு உதவியாக இருக்கும்” என பிரதமர் தமிழக முதல்வரிடம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர வறட்சி பாதிப்பை சமாளிக்க தேவையான உதவிகளை மத்திய அரசு தமிழக அரசுக்கு செய்யும் என பிரதமர் உறுதியளித்துள்ளதாகவும் அந்த ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வறட்சி பாதிப்புகளை ஆய்வு செய்ய வெகுவிரையில் மத்திய குழு ஒன்று தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.