ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி

தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த 2014–ம் ஆண்டு மே மாதம் தடை விதித்தது. தமிழக அரசின் வற்புறுத்தலால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஜனவரி 8–ந் தேதி அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது.

ஆனால், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் மற்றும் 9 தனிநபர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை ஏற்று, சுப்ரீம் கோர்ட்டு ஜனவரி 14–ந் தேதி ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்தது. பதில் மனுதாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மத்திய அரசு ஜூலை மாத இறுதியில் பதில் மனுவை தாக்கல் செய்தது. தமிழக அரசு தரப்பிலும் கூடுதல் ஆவணங்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவின் மீதான இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே வாதாடும்போது, ‘ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும். மராத்தான் போட்டிகளுக்கு அனுமதி வழங்கும்போது காளை போட்டிகளுக்கு ஏன் அனுமதி வழங்கக் கூடாது? மனிதர்களின் உரிமைகளை விட காளைகளின் உரிமை உயர்வானது என்று கருத முடியுமா?’ என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை முதலில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு பிறகு மத்திய அரசின் அறிவிக்கைக்கு தடை கோரும் மற்ற மனுக்களையும் விசாரிக்கலாம் என்று நீதிபதிகள் கூறினர். மேலும் வழக்கின் மீதான விசாரணையை நவம்பர் 16–ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சீராய்வு மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஜல்லிக்கட்டு அனுமதிக்கக்கூடியது அல்ல என்றும், தமிழக அரசின் மனு ஏற்கக்கூடியதல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த உத்தரவால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேசமயம், ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கூறி வருகிறார்கள்.