ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட முடியும்: மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகவியலாளர்களை நேற்று (29) மாலை கொழும்பில் சந்தித்த சந்தர்ப்பத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, மஹிந்த ராஜபக்ஸ விருந்து உபசாரம் ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்ததாக பி.பி.சி உலக சேவையின் கொழும்பு ஊடகவியலாளர் அசாம் அமீன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவை தற்போதைய ஜனாதிபதி பிரதமராக நியமித்தால் ஒன்றாக இணைந்து செயற்பட முடியுமா, என இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியதாக பி.பி.சி செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவினால் அதனை செய்ய முடியும் எனின், 1970 ஆம் ஆண்டில் இருந்து நன்றாக அறிந்த ஒருவருடன் தமக்கு செயற்பட முடியும் என மஹிந்த ராஜபக்ஸ இதன்போது தெரிவித்துள்ளார்.

அவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டால் தமக்குத் தேவையான நிபந்தனைகளுக்கு அமைய, அந்த செயற்பாடு இடம்பெற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி பி.பி.சி செய்தி சேவைக்கு கூறியுள்ளார்.

சீனாவிற்கு ஹம்பாந்தோட்டையில் உள்ள 15 ஆயிரம் ஏக்கர் காணியை வழங்குவது தொடர்பான தீர்மானத்திற்கு தாம் எப்போதும் இணங்கப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

இது தொடர்பில் குறித்த சீன நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாகக் கூறிய முன்னாள் ஜனாதிபதி, தமது ஆட்சிக்காலத்தில் சீன தொழிற்பேட்டைக்காக 750 ஏக்கர் காணியை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சிக்காலத்தில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்தமையால், இந்திய தூதரகம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்ததை நினைவூட்டிய மஹிந்த ராஜபக்ஸ, தற்போது அவர்கள் எலிகளைப் போன்று செயற்படுவதாகக் கூறியுள்ளார்.

இவ்வாறான ஒரு சம்பவம் தொடர்பில் தனது ஆட்சிக்காலத்தில் இந்தியா வெளிப்படையாக எதிர்ப்பைத் தெரிவித்த போதிலும், திருகோணமலை துறைமுகம் கிடைக்கப்போவதினால் அவர்கள் தற்போது மெளனமாக இருக்கின்றார்களா என்பது தனக்குத் தெரியாது என மஹிந்த ராஜபக்ஸ, பி.பி.சி செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்