சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை பிரபலங்கள் கருத்துகள்

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு வழங்கிய தண்டனை குறித்து பிரபலங்கள் கருத்துக்கள் கூறி இருக்கின்றனர்.

சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு விரைவில் வர இருந்ததால் அவரை ஆட்சி அமைக்க அழைப்பதில் கவர்னருக்கு தயக்கம் இருந்தது. சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று காலை சசிகலா குற்றவாளி என தீர்ப்பு  வழங்கி  கர்நாடக உயர் நீதிமன்றம் வழ்ங்கிய 4 வருட ஜெயில் தண்டனையை உறுதி செய்தது.

இந்த தீர்ப்பு குறித்து அரசியல் கட்சியினரும் பல்வேறு திரை உலக பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகை கவுதமி ஜெயலலிதாவின் மறைவுக்கும் சசிகலா பதில் சொல்ல வேண்டும் என்று  தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிலிருந்தே தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார் கவுதமி. தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து, “சசிகலா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார். அவர் ‘அம்மாவின்’ மறைவுக்கும் பதில் சொல்ல வேண்டும்.

இரண்டு வழக்குகளுக்கும் சரிசமமான தீர்ப்பு சரியாகாது.. அம்மாவுக்கான நியாயம் வேண்டும்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கவுதமி.

தன் அரசியல் கருத்துக்களை தொடர்ந்து டுவிட்டரில் பதிவு செய்துகொண்டு வரும் அரவிந்த் சாமி, இந்த தீர்ப்பு பற்றி கூறும் போது

முதல்வர் ஆபீஸ் போகணும், எம்.எல்.ஏ க்கள் தங்கள் மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும். அதற்கு முதல்வர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இரண்டு பேருக்கும் இதில் கொண்டாட ஒண்ணுமில்லை.

அதனால் காபந்து முதல்வர் மக்கள் பணிக்கு திரும்பி , பின் அரசியலை பார்க்க வேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்பும், அது சொல்லுற விஷயமும் என்னென்னு ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்’ என்று டுவீட் செய்துள்ளார்.