சேகர் ரெட்டியிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்கள், அதிகாரிகளின் பட்டியலை வெளியிட வேண்டும்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ரூ.300 கோடி
தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மணல் கொள்ளை சேகர் ரெட்டியிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியிருப்பதாகவும், இதுகுறித்த விவரங்கள் அடங்கிய குறிப்பேட்டை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரிடமிருந்து அமைச்சர்களும், அதிகாரிகளும் கைநீட்டி பணம் வாங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. அந்த குறிப்பேட்டில் உள்ள கணக்குகளின்படி மட்டும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.300 கோடிக்கும் அதிகமான பணம் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

 

சேகர் ரெட்டியின் குறிப்பேட்டில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், அமைச்சர்களின் தனிச் செயலாளர்கள் ஆகியோரின் விவரங்களை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு அனுப்பியுள்ள வருமானவரித்துறை அக்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்காணிப்பு பிரிவை கொண்டு விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று கேட்டு கொண்டிருக்கிறது.

 

உத்தரவிட வேண்டும்
தமிழக அரசின் கண்காணிப்பு ஆணையராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பவர் கிரிஜா வைத்தியநாதன் தான் என்பதால், அவர் தான் முதல்–அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், அமைச்சர்களின் உதவியாளர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். ஆனால், வருமானவரித்துறையிடமிருந்து கடிதம் வந்து பல நாட்கள் ஆகியும் எந்த விசாரணைக்கும் உத்தரவிடப்படாதது சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

 

தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மிகவும் நேர்மையான அதிகாரி. முதல்–அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் வருமானவரித்துறையே ஆதாரங்களை அளித்து விசாரணை நடத்தும்படி கேட்டு கொண்ட பிறகும் அதுபற்றி விசாரணை நடத்தாமல் தாமதிப்பது சரியல்ல. எனவே, சேகர் ரெட்டியிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பட்டியலை தலைமை செயலாளர் வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.