சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளம்: பேருந்து, கார் சிக்கியதால் பரபரப்பு

மெட்ரோ ரயில் பணிகளால் சென்னை அண்ணா மேம்பாலம் அருகே திடீரென ஏற்பட்ட 10 அடி ஆழ பள்ளத்தில் மாநகர பஸ்ஸும், காரும் நேற்று சிக்கின. இந்த சம்பவத்தால் போக்குவரத்து பாதிப்படைந்தது.
சென்னையில் மெட்ரோ ரயில் பணிக்காக சுரங்கம் தோண்டும் பணிகளின்போது சில இடங்களில் சுரங்கப்பாதையில் இருந்து சிமென்ட் கலவை வெறியேறுவது, திடீரென பள்ளம் ஏற்படுவது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த 2 மாதங்களில் மட்டுமே அண்ணா சாலையில் 3 சம்பவங்கள் நடந்துள் ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அண்ணா மேம்பாலம் அருகே திடீரென சிமென்ட் கலவை வெளியேறியது.
இந்நிலையில் நேற்று பிற்பகலில் அண்ணா சதுக்கத்தில் இருந்து 25ஜி மாநகர பஸ் சென்று கொண் டிருந்தது. ஓட்டுநராக குணசீலனும் நடந்துநராக ரமேஷும் பணியாற்றி னர். 7 பெண்கள் உட்பட மொத்தம் 35 பயணிகள் அதில் இருந்தனர்.
அப்போது, சாலையில் திடீரென சுமார் 10 அடி ஆழம், 20 அடி அகலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. உடனே மாநகர பஸ்ஸும் அருகே வந்துகொண்டிருந்த காரும் உள்ளே இழுக்கப்பட்டன. பஸ்ஸின் உள்ளே இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். உடனடியாக ஓட்டுநரும், நடத்துநரும், பொது மக்களும் இணைந்து பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர். கார் உரிமையாளரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
சம்பவம் குறித்து அறிந்த பல்வேறு துறைகளின் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு அமைச்சர்கள் ஜெயக் குமார், எம்.சி.சம்பத் ஆகியோர் வந்து ஆய்வு நடத்தி பணிகளை துரிதப்படுத்தினர்.
அண்ணாசாலையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்ல வேண்டிய வாகனங்கள் ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலை, கோபாலபுரம் வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால், ராயப்பேட்டையில் உள்ள முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பள்ளத்தில் சிக்கியிருந்த கார் சிறிய கிரேன் மூலம் மீட்கப்பட்டது. பஸ்ஸை மீட்க 55 டன் திறன் கொண்ட ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டது. பஸ்ஸின் இருபுறமும் வலுவான பெல்ட்கள் பொருத்தப்பட்டு அப்படியே தூக்கி பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, ‘‘பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகே மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், சில நேரங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்துவிடுகின்றன. பெரிய இயந்திரங்கள் மூலம் பணிகளை மேற்கொள்ளும்போது மண் வலுவிழப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இந்த சம்பவத்தை பாடமாக வைத்துக் கொண்டு இனியும் இதுபோல், நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் கூறும்போது, ‘‘இங்கு 2 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மண் வலுவிழப்பதால் இதுபோன்ற பள்ளம் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் ஜெர்மன், அயர்லாந்து நாடுகளின் தொழில்நுட்ப வசதிகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. விரைவில் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனியும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்கப்படும்.’’ என்றார்.
“இந்த சாலை விரைவாக சீரமைக்கப்பட்டு நாளை (இன்று) காலை முதல் வழக்கமாக வாகனங்கள் செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும்” என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பஸ், கார் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு
உடம்பு சிலிர்த்துவிட்டது
விபத்து குறித்து பஸ் ஓட்டுநர் குணசீலன் கூறும்போது, ‘‘சர்ச் பார்க் பஸ் நிறுத்தத்திலிருந்து பஸ்ஸை எடுக்க முயன்றபோது சக்கரம் உள்ளே இழுக்கப்படுவது போல் உணர்ந்தேன். உடனே கீழே இறங்கி பார்த்தேன். அப்போது, பஸ் சக்கரத்தின் கீழே பள்ளம் ஏற்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். என்ன செய்வது என்றே தெரியாமல் பதற்றத்தில் என் கை, கால் நடுங்கியது. உடம்பு சிலிர்த்துவிட்டது.
சிறிது நேரத்தில் பள்ளம் பெரிதாகி பஸ் அதில் சரிந்துவிட்டது. உடனே பயணிகளுக்கு விவரத்தை தெரிவித்து பாதுகாப்பாக இறக்கிவிட்டோம். பின்னர், போலீஸ் மற்றும் மாநகர போக்குவரத்துக்கழக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தேன்’’ என்றார் பதற்றத்துடன்.