செந்தில் பாலாஜி உறவினர், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் இல்லங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவில் தினகரன் அணியின் ஆதரவாளர்களில் ஒருவர் செந்தில் பாலாஜி. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர்.

செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூரில் உள்ள அவரது நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர் ராம் நகர், ராமகிருஷ்ணா நகர், தான் தோன்றி மலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடக்கிறது. கோவையிலிருந்து இணை இயக்குநர் தலைமையில் சென்ற வருமான வரித்துறையினர் அவரது நண்பர்கள் என்று கூறப்படும் சுவாமிநாதன், சுப்ரமணி, சாரணி சரவணன், தியாகராஜன் ஆகியோர் இல்லங்கள் நிதி நிறுவனங்கள் உட்பட பல இடங்களில் சோதனை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மோசடிப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் பணம் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தலைமறைவாக இருக்கும் செந்தில் பாலாஜி தான் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.