சூறாவளி மைக்கேல்: மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடியது – அச்சத்தில் புளோரிடா

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சில மணி நேரங்களில் கரையை கடக்கவுள்ள மைக்கேல் சூறாவளி மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய நான்காம் வகை சூறாவளி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மணிக்கு 130 மைல்கள் வேகத்தில் வீசும் இந்த புயல் இன்னும் சற்று நேரத்தில் கரையை கடக்கவுள்ளது.

புளோரிடாவில் 3,70,000 பேருக்கும் அதிகமான மக்கள் அவர்களை இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறும், உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அமெரிக்காவில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட புயல் மழை மற்றும் வெள்ளத்தால் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

புளோரிடாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அலபாமா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அச்சுறுத்தலில் புளோரிடா

மைக்கேல் சூறாவளியானது மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய நான்காம் வகை சூறாவளியாக மாறியுள்ளதாக தனது அண்மைய அறிக்கையில் மியாமியை மையமாக கொண்ட தேசிய சூறாவளி மையம் (என்ஹெச்சி) தெரிவித்துள்ளது.

மிகவும் வேகமாக காற்று வீசும் என்றும், உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய சூறாவளியாக உருவாகி இருப்பதாகவும் அந்த மையம் எச்சரித்துள்ளது.

கரையை கடக்கும்முன்பு இந்த சூறாவளி மேலும் வலுப்பெறும் என்று என்ஹெச்சி மையம் தெரிவித்துள்ளது.

சூறாவளி தொடர்பாக விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை மீறி, குறைந்த அளவு மக்களே தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிராந்தியத்தில் உள்ள கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இந்த வாரம் மூடப்பட்டு உள்ளன.

படத்தின் காப்புரிமைAFP

இதே போல் அலபாமா மாகாணத்திலும் சூறாவளியை சமாளிக்க அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ”வரவிருக்கும் சூறாவளியை சமாளிக்க நாங்கள் முழு அளவில் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.