சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்

சூரிய சக்தியில் ரயில்களை இயக்குவதற்கான பணியை இந்திய ரயில்வே செயல்படுத்தி வருகிறது. இதன் மூலமாக புதிய சாதனையை இந்திய ரயில்வே படைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய ரயில்வே, சூரிய சக்தியால் ரயில்களை இயக்குவதற்கான புதிய திட்டத்தை தற்போது துவங்கியுள்ளது. ரயில்வேயின் வழித்தடங்களில் சூரிய சக்தியுடன் ரயில்கள் இணைக்கப்படும். இதற்கான செயல்பாடுகளை இந்திய ரயில்வே ஏற்கனவே துவங்கி பாதியளவு முடிந்துவிட்டது. ரயில்வே தனது பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய பிரதேச மாநிலம் பினாவில், ஒரு சூரிய மின்சக்தி நிலையம் (Solar) அமைத்து அதற்கான பணிகளில் மும்முரமாக களமிறங்கி யுள்ளது. இது 1.7 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியது. இதன் மூலம் சூரியசக்தியுடன் ரயில்களை இணைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ரயில்களை இயக்க சூரிய ஆற்றல் (Solar Power) பயன்படுத்தப்படுவது உலக வரலாற்றில் இதுவே முதல்முறை என ரயில்வே கூறுகிறது. இதன் சிறப்பு என்னவெனில், இங்கிருந்து 25,000 வோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன் உதவியுடன் ரயில்களை இயக்க நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும். தற்போது காலியாக உள்ள ரயில்வேயின் நிலத்தில் பிஹெச்எல் நிறுவனத்துடன் (BHEL) இணைந்து, ம.பி.,யின் பினாவில் 1.7 மெகாவாட் திறனுள்ள சூரிய மின் உற்பத்தி நிலையம் (Solar Power Station) அமைக்கப்பட்டுள்ளது. ரயிலை இயக்கக்கூடிய வகையில் உலகம் முழுவதும் இதுபோன்ற மின் உற்பத்தி நிலையம் இல்லை. உலகின் பிற ரயில் நெட்வொர்க்குகள் சூரிய சக்தியை முதன்மையாக நிலையங்கள், குடியிருப்பு காலனிகள் மற்றும் அலுவலகங்களின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்துகின்றன.

சில ரயில்களின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி பேனல் (Solar Panel) இந்திய ரயில்வே நிறுவியுள்ளது. இதன் காரணமாக ரயில் பெட்டிகளில் மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால் இப்போது வரை, எந்த ரயில் நெட்வொர்க்கும் ரயில்களை இயக்க சூரிய சக்தியைப் பயன்படுத்தவில்லை.