சுவிஸில் முதன்முறையாக இலங்கை கலாசார, வர்த்தக உணவுப் பெருவிழா

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இலங்கையின் கலாசார, வர்த்தக மற்றும் உணவு பெருவிழாவை நடத்த உள்ளது.

இந்த விழா 09, 10, 11 – 09 – 2016 திகதிகளில் நடைபெறவுள்ளதாக துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.

மேற்படி பெருவிழாவிற்கான அனுமதி இலவசம், விழாவில் 60 வீத இலங்கையர்களும், 40 வீதமான சுவிஸ் பிரஜைகளும் என 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் துணைத் தூதுவர் விதர்சன முனசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

சுவிஸ் வாழ் இலங்கை மக்களின் ஏகோபித்த ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரு விழாவில் இலங்கையின் முன்னணி வர்த்தக நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இலங்கையின் வங்கிகள், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, ஏற்றுமதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், ஆயுர்வேத நிறுவனங்கள், விமான போக்குவரத்து நிறுவனங்கள், அழகு சாதன, அழகு கலை நிறுவனங்கள், தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் உட்பட சுவிட்சர்லாந்தின் பல்வேறு நிறுவனங்களும் கலந்து கொள்ளவுள்ளன.