சுற்றுச்சூழல் பாதிப்பு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை: சீமைக்கருவேல மரங்களை வெட்ட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

சீமைக்கருவேல மரங்களால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது என்பது இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை என்பதால் தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக் கறிஞர் வி.மேகநாதன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

சீமைக்கருவேல மரம் பல்வேறு நாடு களில் உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த மரங்கள் ஏராளமாக உள்ளன. வறட்சி பாதித்த பகுதிகளில் இந்த மரங்கள்தான் பசுமைப் போர்வையாக உள்ளன. இந்த மரங்கள் கரித்தூள், எரிபொருள், காகிதம், அட்டை போன்ற பொருட்களை தயாரிப் பதற்கும், காற்றின் வேகத்தைக் குறைப் பதற்கும், வேலி அமைப்பதற்கும், சில விலங்குகளின் உணவாகவும் பயன்படு கிறது. முக்கியமாக இந்த மரங்கள் விறகாக பயன்படுகின்றன. மருத்துவ குணங்களும் இந்த மரங்களுக்கு உண்டு.

இந்த மரங்களால் நைட்ரஜன், கந்தகம் போன்ற வேதிப் பொருட்களின் வளங்கள் மண்ணுக்கு அதிகமாக கிடைக்கும். இந்த மரங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக இதுவரை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இந்த மரங்கள் கட்டுக்கடங்காமல் வளர்ந்து பரவியிருந்தாலும் இவற்றை ஒரேயடியாக ஒழித்துவிட முடியாது. வெட்ட, வெட்ட இந்த மரங்கள் வளர்ந்து கொண்டுதான் இருக்கும்.

இந்த மரங்கள் இல்லையேல் கிராமப் புற மக்களின் வருவாய் வெகுவாக பாதிக் கும். மலைப் பகுதிகளில் இந்த மரங்களை வெட்டுவதால் மண்ணின் ஸ்திரத்தன்மை போய்விடும். வறட்சி மாவட்டங்களில் இந்த மரங்களை வெட்டுவதால் மழையளவும் குறையும். விலங்குகளுக்கு உணவாகவும், நிழலுக்கும் மாற்று வகையான மரங்களை நடாமல் இந்த கருவேல மரங்களை வெட்டக்கூடாது.

அறிவியல் பூர்வமான ஆய்வுகளை நடத்திய பிறகே இந்த மரங்களை அழிக்க வேண்டும். அதுபோல இந்த மரங்கள் இந்தியாவில் தடை செய்யப் பட்டவை அல்ல. உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த மரங்களை வெட்ட உத்தரவு பிறப்பித்து இருப்பது சட்டப்பூர்வமானதாக இல்லை. மேலும் இந்த மரங்களைச் சார்ந்து இருக்கும் மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும் பெரிய இழப்பாகவே அமையும். எனவே இது தொடர்பாக கொள்கைரீதியாக சட்டம் இயற்ற வேண்டும். தமிழகம் முழுவதும் இந்த மரங்கள் தற்போது போர்க்கால அடிப்படையில் வெட்டப்பட்டு வருகின்றன.

சென்னை ஐஐடி வளாகம் மற்றும் கிண்டி தேசிய பூங்காவில் ஏராளமான வன விலங்குகளும், 160 வகையான பறவை இனங்களும், 60 வகையான வண்ணத்துப் பூச்சிகளும், 300 வகையான மரங்களும் உள்ளன. இதில் சீமைக்கருவேல மரங்களும் அடங்கும்.

ஏற்கெனவே வார்தா புயலால் ஏராள மான மரங்கள் இங்கு விழுந்துவிட்டன. தற்போது சீமைக்கருவேல மரங்களையும் வெட்டிவிட்டால் உஷ்ணம் அதிகரிக்கும். பறவை மற்றும் வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே சீமைக் கருவேல மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகி யோர் அடங்கிய முதல் அமர்வில் நடந்தது.

அப்போது நீதிபதிகள், இது தொடர்பாக சென்னை ஐஐடி இயக்குநர் மே 11-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும் மே 11-ம் தேதி வரை தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.