சுயமாக செயல்பட வேண்டும்: ‘பா.ஜ.க.வின் பினாமி அரசாக தமிழக அரசாங்கம் செயல்படுகிறது’; திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் அமைப்பு தேர்தல் குறித்தும், உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார்.

இதில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, விஜயதரணி எம்.எல்.ஏ., அமைப்பு தேர்தலுக்கான மாநில தேர்தல் அதிகாரி பாபி ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

குடிநீர் பிரச்சினை

தமிழ்நாட்டில் குடிநீர் பிரச்சினை அதிகமாக இருக்கிறது. இதை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் அதிக நிதி ஒதுக்க வேண்டும். தமிழகத்தை மோடி அரசு கண்டுகொள்ளவில்லை. தமிழகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பலம் இல்லாத அரசாங்கம் இருக்கிறது.

உட்கட்சியில் இருக்கிற பிரச்சினை அமைச்சரவையில் பிரதிபலிக்கிறது. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு இருக்கிறது. ஆகவே வலுவில்லாத அரசாங்கமாகவும், முடிவு எடுக்க முடியாத அமைச்சராகவும் இருக்கிறார்கள். பா.ஜ.க. அரசால் நிர்பந்திக்கப்பட்டு செயல்படாத நிலையில் அ.தி.மு.க. அரசு இருக்கிறது.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடக்கிறதா? அல்லது பா.ஜ.க. ஆட்சி நடக்கிறதா? என்று கேட்கக்கூடிய அளவுக்கு இன்றைய செயல்பாடு இருக்கிறது. மத்திய மந்திரிகள் தலைமை செயலகத்துக்கு சென்று ஆய்வு நடத்தும் சூழல் உருவாகி இருக்கிறது. இதுவே கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்த போது இப்படி நடந்தது கிடையாது.

பினாமி அரசு

அமைச்சர்களை அச்சுறுத்துவது, கட்டுப்பாடுகளை விதிப்பது என மத்திய அரசின் செயல்பாடுகள் இருக்கிறது. அ.தி.மு.க.வை உடைத்து பார்த்தார்கள். அது தங்களுக்கு சாதகமாக பயன்படவில்லை. இதனால் இப்போது சேர்த்து பயன்படுத்த பார்க்கிறார்கள்.

ஒட்டு மொத்தமாக பயமுறுத்தி பணிய வைத்து எதிர்காலத்தில் நடக்க இருக்கக்கூடிய ஜனாதிபதி தேர்தல், துணை ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் இவற்றிலே தமிழ்நாட்டில் கால் பதிப்பதற்காக பா.ஜ.க. அரசு எல்லா நாடகத்தையும் தமிழகத்தில் அரங்கேற்றுகிறது.

பா.ஜ.க.வின் பினாமி அரசாக செயல்படாமல், தமிழக அரசாங்கம் சுயமாக செயல்பட வேண்டும். இதை தான் மக்கள் விரும்புகிறார்கள். கட்டுப்பாட்டுக்கு உட்பட்டோ, பயமுறுத்தலுக்கு உட்பட்டோ, மத்திய அரசின் அச்சுறுத்தலுக்கு உட்பட்டோ இந்த அரசாங்கம் செயல்பட்டால், மக்கள் நலப்பணிகள் நிறைவேறாது.

வருத்தம் அளிக்கிறது

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய பல்வேறு தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்கு சென்று விட்டன. இதனால் வேலைவாய்ப்பு இல்லாமல் போகிறது. தமிழ்நாடு இதனால் பல்வேறு இழப்புகளுக்குள்ளாகி இருக்கிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியது.

பிளஸ்–2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், தனியார் பள்ளிகளை விட குறைவாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. உடனடியாக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். இதில் கல்வித்துறை முழுக்கவனம் செலுத்த வேண்டும். இன்று (நேற்று) அன்னையர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, உலகம் முழுவதும் உள்ள அன்னையர்களுக்கு வாழ்த்துகளை காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.