சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் & இந்திய கொடுத்த பதிலடியில் சீனா தரப்பில் 43 வீரர்கள் பலி

கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய படைகள் மீது சீன ராணுவம் திடீரென அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இரு நாடுகளுக்கிடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் 2 வீரர்கள் என 3 பேர் வீரமரணம் அடைந்தாகவும், இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் சீனா தரப்பிலும் சில வீரர்கள் உயிரிழந்ததாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் பி.டி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. மற்றொரு செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. வெளியிட்டுள்ள செய்தியில் இந்திய அரசு வட்டாரங்களில் வெளியான தகவலின் அடிப்படையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய கொடுத்த பதிலடியில் சீனா தரப்பில் 43 வீரர்கள் பலியாயினர். மேலும் சில வீரர்கள் காயமடைந்தனர். இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன வீரர்கள் வெளியேறும் போது வன்முறை வெடித்தது. அதில், இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.இதனிடையே, மோதல் காரணமாக இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து,கல்வான் பள்ளத்தாக்கு, லடாக் மற்றும் சில பகுதிகளில் நிலவும் வன்முறையை குறைக்க இந்திய- சீன ராணுவ மேஜர் ஜெனரல்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

சீன ராணுவத்தால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்த 20 இந்திய வீரர்களில் ஒருவர் பெயர் பழனி. இவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஆவார். 22 ஆண்டுகளாக பணிபுரியும் இவர், ஹவில்தாராக உள்ளார்.