சீனா உடனான பிரச்னை: 73 சதவீதம் பேர் மோடி மீது நம்பிக்கை

சீனா உடனான பிரச்னையை ராகுலை விட பிரதமர் மோடி தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக 73 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

கடந்த வாரம் லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட மோதலில் ஒரு கர்னல் உட்பட 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனையடுத்து இரு நாடுகளுக்கிடையேயான பிரச்னையை யார் திறமையாக கையாளுவர் என்ற கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

ஏபிபி மற்றும் சி வோட்டர் நிறுவனங்கள் இந்த கருத்து கணிப்பை நடத்தி உள்ளது அதில் கூறப்பட்டுள்ள விபரம் வருமாறு: 72.6 சதவீதம் பேர் இப்பிரச்னையில் பிரதமர் மோடி தலைமை மீது நம்பிக்கை இருப்பதாக தெரிவித்து உள்ளனர். மேலும் 68 சதவீதம் பேர் பாகிஸ்தானை வி இந்தியாவுக்கு சீனா ஒரு பெரிய பிரச்னையாக இருப்பதாக நம்புவதாக தெரிவித்து உள்ளனர். 32 சதவீம் பேர் மட்டுமே பாகிஸ்தான் தான் தீவிரமான கவலை தருவதாக கூறி உள்ளனர்.

சீனா மீது இந்தியா உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளதா என்ற கேள்விக்கு 60 சதவீதம் பேர் எதிர்மறையாகவும் 38 சதவீதம் பேர் மட்டுமே உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினர்.

தொடர்ந்து 16.7 சதவீதம் பேர் எதிர்கட்சிகளுக்கு ஆதரவாகவும், 9.6 சதவீதம் பேர் மோதலை திறம்பட கையாளுவதற்கு அரசோ எதிர்கட்சிகளோ இல்லை என கூறி உள்ளனர்.

எல்லை நெருக்கடியை கையாண்டதில் பிரதமர் மோடிக்கும் எதிர்கட்சி தலைவர்களில் ஒருவரான ராகுலுக்கும் இடையேயான ஒப்பீடு கேள்விக்கு 61 சதவீம் பேர் ராகுல் மீது நம்பிக்கை இல்லை என கூறி உள்ளனர்.