சீனாவின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக மங்கோலியர்கள் போராட்டம்

சீனாவின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக மங்கோலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீனாவின் வடக்கு பகுதியில் வாழும் மங்கோலிய இன மக்கள் சீனாவின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக போராடி வருகின்றனர். மங்கோலிய மொழி தான் எங்கள் தாய்மொழி அதை ஒரு போதும் இழக்கமாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சீனாவில் வசிக்கும் மங்கோலியர்கள் தங்கள் தாய்மொழியை தனித்துவ அடையாளமாகவும், கலாச்சாரமாகவும் கருதி வாழ்கின்றனர். அவர்களின் தாய்மொழி உணர்வை புண்படுத்தும் விதமாகவும், சீன கலாச்சாரத்தை அவர்கள் மீது திணிக்கும் விதமாகவும் சீனா புதிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது.

சீன அரசின் அடக்குமுறை குறித்து மங்கோலியர்கள் கூறுகையில், ‘ சீனாவின் புதிய கல்வி கொள்கையால் எங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும். எங்களுக்கு தனித்துவ கலாச்சாரம், அடையாளங்கள் இருக்கின்றன. சீன மொழியில் கற்பிக்கப்படுவதை நாங்கள் ஏற்றுக் கொண்டால் மங்கோலிய மொழி முற்றிலும் அழிந்து விடும். தொலைக்காட்சியில் கூட அனைத்து நிகழ்ச்சிகளும் சீன மொழியில் தான் நடத்தப்படுகின்றன. கார்டூன் படங்கள் கூட சீன மொழியில் தான் ஓடுகின்றன. சீன மொழி திணிப்பை நாங்கள் ஏற்கமாட்டோம். பள்ளிகளில் சீன மொழி முக்கிய மொழியாகவும் மங்கோலிய மொழி துணை மொழிப் பாடமாகவும் கற்பிக்கப்படுகிறது. இது தொடர்ந்தால் 10 அல்லது 20 வருடங்களில் எங்கள் மொழி அழிந்து விடும்’ என்று கூறுகின்றனர்.

இது குறித்து சீனாவின் மொழி பேராசிரியர் ஒருவர் கூறுகையில்,’ மங்கோலிய மொழி ஏற்கனவே ஆபத்தான நிலையில் உள்ளது. 40 சதவீதத்திற்கும் குறைவான பெற்றோர்கள் தான் மங்கோலிய மொழி கற்பிக்கும் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்கின்றனர். 60 சதவீத பெற்றோர்கள் சீன மொழியில் மட்டும் கற்பிக்கும் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்துள்ளனர். இந்த சூழலில் தான் சீன அரசு புது கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளது’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.