சீனாவின் எச்சரிக்கையையும் மீறி தைவான் நீரிணையில் அமெரிக்கக் கடற்படை போர் கப்பல்

சீனாவின் எச்சரிக்கையையும் மீறி, தைவான் நீரிணையில் அமெரிக்கக் கடற்படை போர் கப்பல் பயணித்து இருப்பது சீனக்கடல் பகுதியில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென் சீனக்கடலில், சீனா தொடர்ந்து ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சி வருகிறது. சமீபமாக தங்களது கட்டுப்பாட்டில் உள்ள தைவானுக்கு சுய அதிகாரம் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக சீனா குற்றம்சாட்டி வருகிறது.

தைவானுக்கு சுதந்திரம் அளிப்பது தங்கள் இறையாண்மைக்கு எதிரானது என்றும் சீனா கூறி உள்ளது. தங்களிடம் இருந்து தைவானைப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் படைபலத்தை பிரயோகிக்கவும் தயங்க மாட்டோம் என்று கடந்த புதன்கிழமை (ஜூலை 24) அன்று சீனா எச்சரித்து இருந்தது.

இந்த நிலையில் சீனா – தைவானைப் பிரிக்கும் நீரிணையில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஆண்டியேட்டம் போர்க்கப்பல் பயணித்து இருப்பது பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அந்தக் கப்பல், தைவான் நீரிணையில் பயணம் மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சீனக்கடல் பகுதியில் கடும் போர்பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடி தரும் நடவடிக்கையில் சீனக்கடற்படை இறங்கினால், நிலமை மேலும் சிக்கலாகும் என்றும், தெற்காசிய பகுதியில் ஒரு போர் மூளும் அபாயம் ஏற்படும் என்றும் சர்வதேச போர் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

எனினும், சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்டே பயணம் செய்ததாக அமெரிக்க கடற்படை கூறியுள்ளது. சர்வதேச சட்டம் அனுமதிக்கும் அனைத்து இடங்களிலும் தொடர்ந்து செயல்படுவோம் என்றும் அமெரிக்கக் கடற்படை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.