சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மஹாராஷ்டிரா முதல்வராக பதவியேற்பு – சோனியா, ராகுல் ஆப்சென்ட்

மஹாராஷ்டிரா முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்று கொண்டார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. விழாவிற்கு பங்கேற்காதது குறித்து இருவரும் உத்தவுக்கு கடிதம் அனுப்பினர்.

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து ‘மகா விகாஸ் அஹாதி’ எனப்படும் மஹாராஷ்டிரா மேம்பாட்டு முன்னணியை அமைத்தன. இந்த கூட்டணி தலைவராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். இக்கூட்டணி, கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கடிதத்தை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வழங்கினார். இதையடுத்து ஆட்சி அமைக்க உத்தவ் தாக்கரேவுக்கு, கவர்னர் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து, இன்று(நவ.,28) மாலை 6.40 மணிக்கு மும்பை தாதர் பகுதியில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில், மஹாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்று கொண்டார். அவருக்கு கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மகாராஷ்ட்ராவின் 19வது முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்றார். கவர்னர் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த 6 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு மகாராஷ்ட்ராவுக்கு சிவசேனா முதல்வர் கிடைத்துள்ளார். பால் தாக்கரே குடும்பத்திலிருந்து முதல்வராகும் முதல் நபர் உத்தவ்தான்.

உத்தவ் தாக்கரேவுடன் 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அஜித்பவாருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை.
அவர்கள் விவரம்:
அமைச்சர்கள் பெயர் – கட்சி
1). ஏக்தநாத் ஷிண்டே -சிவசேனா
2). சுபாஷ் தேசாய் – சிவசேனா
3) ஜெயந்த் ராஜாராம் பாட்டீல் – தேசியவாத காங்.,
4) சாகன் சந்திரகாந்த் புஜ்பால் – தேசியவாத காங்.,
5) பாலாசாகேப் திராட் – காங்.
6). நிதின் ராவத் – காங்.,

இந்த விழாவில்,தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அவரது மகள் சுப்ரியா சுலே, நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, திமுக தலைவர் ஸ்டாலின், மஹா., முன்னாள் முதல்வர் பட்னவிஸ், அஜித்பவார், சகஜ்புஜ்பால், பிரபுல் படேல், ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அம்பானி, காங்., தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே கூட்டணி அரசின் குறைந்த பட்ச செயல்திட்டம் வெளியிடப்பட்டது. அதில், விவசாயிகளுக்கு உடனடி உதவி. கடன் தள்ளுபடி வழங்குவது. பயிர் சேதத்திற்கு உடனடி நிவாரணம் வழங்கும் வகையில், பயிர் காப்பீடு திட்டம் மாற்றி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா விகாஸ் அஹாதியில் இரண்டு ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரு குழுவானது மாநில அரசில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தவும், மற்றொரு குழு, கூட்டணி கட்சிகள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் அமைக்கப்பட்டுள்ளது.

உத்தவ் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா, எம்.பி.,ராகுல் பங்கேற்கவில்லை.
இது தொடர்பாக உத்தவ்விற்கு சோனியா எழுதிய கடிதம்: நேற்று, ஆதித்ய தாக்கரே என்னை சந்தித்து, மும்பையில் நடக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி அழைப்புவிடுத்தார். இந்த விழாவில் பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன், பா.ஜ.,விடமிருந்து வந்துள்ள எதிர்பாராத அச்சுறுத்தல்கள் ஏற்பட்ட சூழ்நிலையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஒன்று சேர்ந்துள்ளது. அரசியல் சூழ்நிலை விஷமாக மாறியதுடன்,பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. விவசாயிகள் பெரிய அச்சுறுத்தலை சந்திக்கின்றனர். பொது செயல் திட்டத்திற்கு, காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஒப்பு கொண்டுள்ளது. இந்த செயல்திட்டத்தை நிறைவேற்றுவதில், 3 கட்சிகளும் உறுதியாக இருக்க வேண்டும். கூட்டணி கட்சிகள், பொறுப்புணர்வுடனும், கடமையுணர்வுடனும் வெளிப்படையான நிர்வாகத்துடன் செயல்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் என நான் நம்புகிறேன். உங்கள் வாழ்க்கையில் புதிய அத்யாயம் துவங்கியதற்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

உத்தவ்விற்கு ராகுல் எழுதிய கடிதத்தில் கூறியதாவது : பதவியேற்பு விழாவில் என்னை அழைத்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஜனநாயகத்திற்கு ஆபத்தாக நடந்த நிகழ்ச்சிகள் அடிப்படையில் மஹாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைய உள்ளது. ஜனநாயகத்தை வீழ்த்த முயற்சி செய்த பாஜ.,வை தோற்கடிக்க மஹாராஷ்டிரா விகாஸ் அகாதி ஒன்று சேர்ந்துள்ளது. கூட்டணி ஆட்சியிடம் மக்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். மாநிலத்தில் நிலையான , மதசார்பற்ற மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான அரசை வழங்கும் என நம்புகிறேன். உங்களின் புதிய பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.