சிலையை உடைக்க வேண்டும் என்று கூறியது காட்டுமிராண்டித்தனம்: எச்.ராஜாவுக்கு ரஜினி கண்டனம்

சிலையை உடைப்பேன் என்பதும், சிலையை உடைப்பதும் காட்டுமிராண்டித்தனம் என்று எச்.ராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்

திரிபுராவில் லெனின் சிலை இடித்து தள்ளப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டிலும் பெரியார் சிலை அகற்றப்படும் என்று எச்.ராஜா முகநூலில் பதிவிட்டது சர்ச்சையை எழுப்பியது. இதை அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டித்தனர்.

இந்நிலையில் அன்று இரவே பெரியார் சிலை சில இடங்களில் உடைக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. எச்.ராஜா தனது பதிவுகளை நீக்கினார். ஆனால் அன்று முழுதும் ரஜினியோ, கமலோ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இரவு 10 மணி அளவில் கமல் ட்விட்டரில் மற்ற கட்சித்தலைவர்களுக்கு புத்தி சொல்வது போல் இதை கண்டித்திருந்தார்.

ஆனாலும் ரஜினிகாந்த் வாயே திறக்கவில்லை. வழக்கமாக ட்விட்டரில் பதிவிடுவது போல் பதிவும் செய்யவில்லை. இந்நிலையில் எச்.ராஜா தான் பதிவு செய்யவில்லை அட்மின் தான் பதிவு செய்தார் என்று பல்டியடித்தார். இந்நிலையில் சகலரும் எச்.ராஜாவை கண்டித்த நிலையில் எம்ஜிஆர் ஆட்சியைத் தருவேன், வெற்றிடத்தை நிரப்புவேன் என்று கூறிய ரஜினி மவுனமாக இருப்பது குறித்த கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இன்று வீட்டிலிருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்திடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது கருத்து தெரிவித்த ரஜினி ”பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கூறியதும், சிலையை உடைத்ததும் காட்டுமிராண்டித்தனம்” என்று தெரிவித்தார்.

சிலை உடைப்பு, சர்ச்சைக்குரிய கருத்து என 48 மணி நேரமாக பிரச்சனை பெரிதாக வெடித்த நிலையில் இதற்கு கருத்து தெரிவிக்காத ரஜினிகாந்த் 48 மணி நேரம் கழித்து கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.