சிறையில் வசதிகள் மோசம்: நவாஸ் உறவினர்கள் புலம்பல்

ஊழல் வழக்கில் கைதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் , சிறையில் மோசமான அறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் சபாஜ் ஷெரீப் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர், பஞ்சாப் மாகாண முதல்வர் ஹசன் அஸ்கரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மோசமான வசதிகள் கொண்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் நான் அவரை சந்தித்த போது, நவாசு படிக்க தினசரி நாளிதழ்கள் வழங்கப்படவில்லை. படுக்கை தரையில் விரிக்கப்பட்டிருந்தது. கழிப்பறை சுத்தமில்லாமல் மோசமாக இருந்தது. ஏசி வசதி இல்லை. அவருக்கு உதவியாளரும், மருத்துவ உதவிகளும் கொடுக்கப்படவில்லை.

நவாசுக்கு உரிய நேரத்தில் மருந்து கொடுக்க வேண்டும். டாக்டர்கள் பரிசோதனை செய்ய வேண்டும். முன்னாள் பிரதமர், இவ்வாறு மோசமான சூழ்நிலையில் வைத்திருப்பது வருத்தத்திற்குரியது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர், நவாசின் மகனும்,சிறையில் தனது தந்தைக்கு உரிய வசதிகள் செய்துதரப்படவில்லை எனப்புகார் கூறியிருந்தார்.ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியமும் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.