சிறையில் சசிகலா மவுன விரதம் இருக்கிறார்: டிடிவி தினகரன் தகவல்

சிறையில் சசிகலா மவுன விரதம் இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் இன்று (வியாழக்கிழமை) மதியம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக சசிகலாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றேன். தற்போது அவர் (சசிகலா) மவுன விரதம் இருக்கிறார். ஜெயலலிதா நினைவு நாள் தொடங்கி அவர் மவுன விரதம் இருந்துவருகிறார். ஜனவரி இறுதிவரை அவர் மவுன விரதம் தொடரும்.

அவர் மவுன் விரதத்தில் இருப்பதால் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுக்கான ஆலோசனைகளை எழுத்துமூலம் பெற்றேன்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்கள் எங்களை ஆதரித்துள்ளனர். தொண்டர்களும், மக்களும் தற்போது நடைபெறும் ஆட்சியைப் புறக்கணித்துள்ளனர்.

கட்சியிலிருந்து எங்களை நீக்க அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பொதுச்செயலாளருக்கு தான் அந்த அதிகாரம் இருக்கிறது.

மக்களால், தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் பதவி அதிகாரத்தால் ஆட்சியில் நீடித்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில் இந்த அரசு தானே கவிழ்ந்துவிடும்.

ஜெயக்குமார் பேசுவதை எல்லாம் ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை. ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. தேவையில்லாமல் சிலர் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த பொய்பிரச்சாரத்தைக் கண்டு கொள்ளத் தேவையில்லை. தேவையற்றதை புறந்தள்ளிவிடுமாறுதான் ஜெயலலிதா எங்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.

ஜெயலலிதா சிகிச்சை பெறும் அந்த வீடியோவை வெற்றிவேல் எங்களிடம் தெரிவிக்காமல் வெளியிட்டுவிட்டார். அதை நாங்கள் யாருக்கும் காட்டுவதற்காக எடுக்கவில்லை. நாங்கள் வெளியிட வேண்டும் என நினைத்திருந்தால் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றுவிட்டே வெளியிட்டிருப்போம்.

மிதப்பில் கோட்டைவிட்ட திமுக

ஆர்.கே.நகரில் நான் சொன்னது நடந்தது. மக்கள் எங்களை ஆதரித்திருக்கின்றனர். திமுகவுடன் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்றெல்லாம் நாங்கள் செயல்படவில்லை. திமுக மெத்தனமாக செயல்பட்டதாலேயே ஆர்.கே.நகரை கோட்டைவிட்டது. அவர்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என நினைத்திருந்தனர். ஆனால், டெபாசிட்கூட வாங்கவில்லை.

ஒருவேளை திமுக களப் பணிகளை தீவிரப்படுத்தியிருந்தால் மதுசூதனன் டெபாசிட் இழந்திருக்கலாம்; ஆனால் நாங்கள் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பேன்” இவ்வாறு அவர் கூறினார்.